நாடு வங்குரோத்தடைந்துள்ளமைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு : பிரசன்ன ரணதுங்க

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முறைமை மாற்றத்திற்காக பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை கொண்டு எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.ஜனாதிபதி அனுப்பிய கடிதம் சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமையவில்லை.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டால் மாத்திரமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சிகள் அங்கத்துவம் பெற வேண்டும் என வெளிப்படை தன்மையுடன் அழைப்பு விடுத்துள்ளோம்.

அனைத்து விடயங்களையும் பிடித்துக் கொண்டு விமர்சனங்களை மாத்திரம் முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பின் பொறுப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply