பாகிஸ்தானில் கோர விபத்து பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இதன் தலைநகர் குவெட்டாவில் இருந்து பாகிஸ்தானின் 2-வது மிகப்பெரிய நகரமான கராச்சிக்கு நேற்று காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள ஒரு பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. பாலத்தின் ஒரு வளைவில் திரும்பியபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ், பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பெட்ரோல் டேங் வெடித்து தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் பஸ்சை முழுமையாக உருக்குலைத்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர்.

இதற்கிடையில் இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 42 பேர் தீயில் உடல் கருகி பலியாகினர். அவர்களது உடல்கள் அடையாளம் காணமுடியாதபடிக்கு கரிக்கட்டைகளாகின. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்த அவர்கள் 3 பேரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply