தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வியாழக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 45 பேர் பலியாகினர். நல்வாய்ப்பாக படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 8 வயது சிறுமி விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் அனைவரும் அண்டை நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனில் இருந்து ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக தேவாலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் என்று தென்னாப்பிரிக்கா ஒலிபரப்புக் கழகம் (எஸ்ஏபிசி) தெரிவித்துள்ளது. போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனில் இருந்து ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக, தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணம் மோரியா நகரத்திற்கு பேருந்தில் புனிதப் பயணம் வந்துள்ளனர். அப்போது, பேருந்து மொகோபனே மற்றும் மார்கென் இடையே உள்ள மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 45 பேர் பலியாகினர். நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பயணிகளின் உடல்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply