தேர்தல் சட்டம் அமுலில் அரசியல் நோக்கங்களுக்காக அபிவிருத்தியை செய்ய வேண்டாம் : தேசப்பிரிய

தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

”நாட்டில் தேர்தல் சட்டம் இத்தருணத்தில் அமுலில்தான் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகிறது.

தேர்தலொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெற்றப்பட்டுவிட்டன. ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே தேர்தல் சட்டம் நடைமுறையில் இருப்பதாக ஆணைக்குழு கூறுகிறது.

இந்த பின்புலத்தில் எதிர்வரும் ஐந்து மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கு இடையில் அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளும் நிதி ஒதுக்கீடுகளும் தேர்தலை இலக்காக கொண்டதென கூறப்படுகிறது. எனது நிலைப்பாடும் அதுதான்.

வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகளை ஜுலை 30 ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்குமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மலையகப் பகுதிகளில் இந்தப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நவம்பர் 30ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மலையகத்தில் இவ்வாறு அபிவிருத்திப் பணிகளை துரிப்படுத்துமாறு கோருவது நல்ல விடயம். அது முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம்தான். என்றாலும், தேர்தலை இலக்காகக் கொண்டு செய்வது பொறுத்தமற்றது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிரப்படும் அரிசியை வழங்க முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டது.

இத்தருணத்தில் அரிசி அல்லது எந்தவொரு நிவாரணம் பகிரப்பட்டாலும் அது மக்களின் வரிப் பணத்தில் வழங்கப்படும் நிவாரணமென அடையாளப்படுத்தப்பட வேண்டும். 2015ஆம் ஆண்டுமுதல் இந்த முறைமைகளை நாம் பின்பற்றினோம்.

உள்ளூராட்சிமன்றங்களுக்கு 10 மில்லியன் வரை நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. அதனை வரவேற்கிறோம்.

அதற்கு பதிலாக குறித்த தேர்தலை நடத்தினால் அதனை இலகுவாக செய்ய முடியும். தற்போது முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் ஆளுநரின் கீழ் முன்னெடுக்கப்படும். அவை முற்றிலும் அரசியல் சார்பானது.” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply