ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? ; சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம் : கனிமொழி
சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின்பேரில் கடந்த வார இறுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் இந்திய சென்ற குழுவில் அங்கம் வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அங்கு வேறு பல சந்திப்புக்களிலும் பங்கேற்றார்.
அதன்படி புதுடில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் புதன்கிழமை (11) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஆர்.கே.ராதாகிருஷ்ணனால் இயக்கப்பட்ட ‘முகமில்ல மனிதர்கள்: இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்’ எனும் தலைப்பில் ஆவணத்திரைப்படமொன்று திரையிடப்பட்டது.
அத்திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுமந்திரன், இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என வலியுறுத்தினார்.
அதனையடுத்து அந்நிகழ்வில் கருத்துரைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கனிமொழி, சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் இருந்த குறித்த எண்ணிக்கையான இந்திய வம்சாவளி தமிழர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இருப்பினும் அந்த எண்ணிக்கை இன்னமும் பூரணமடையாததன் காரணமாக அதில் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் இணைக்கமுடியுமா என்பது குறித்தும், அதனூடாக இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கமுடியுமா என்பது பற்றியும் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply