புத்தளம் மாவட்டத்தின் அதிக பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கின

இலங்கையில் தொடரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரம் புதன்கிழமை மாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இம் மாவட்டத்திலுள்ள தெதுருஒயா ஆறு மற்றும் ஆராச்சிகட்டுவ, மஹாவேவ ஆகிய குளங்கள் மழை வெள்ளம் காரணமாக நிரம்பி வெள்ளம் பாய்வதால் அம் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

தெதுருஒயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே சிலாபம் நகரம் நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் மாவட்டத்தில ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய சுமார் 5000 குடும்பங்கள் 47 தற்காலிக முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நெடுஞ்சாலைகளிலும் ரயில் பாதைகளிலும் வெள்ள நீர் பாய்வதால் வெளியிடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன.

மாலையில் பெருக்கெடுத்த தெதுருஓயா ஆற்று வெள்ளம் சிலாபம் நகரை சூழ்ந்த போது மக்கள் பதற்றமடைந்தனர். பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படையினரின் உதவியுடன்அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் உள்ளுர் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சுமார் 46 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல் துறை துண இயக்குனர் லால்குமார கூறுகின்றார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகவும் காணாமல் போனோரின் எண்ணிக்கை 14 ஆகவும் தற்போது உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு நிலைமை

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை மழை சற்று ஓய்ந்து வெள்ள நீர் வடிந்து வருகின்ற போதிலும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய குடும்பங்கள் தொடர்ந்தும் தற்காலிக இருப்பிடங்களிலேயே தங்கியுள்ளனர்.

உள்ளுர் மற்றும் வெளியூர் போக்குவரத்துகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதால் நிவாரணப் பணியார்களும் அதிகாரிகளும் படகுகளில் பயணம் செய்தே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply