இலங்கையில் மின் கட்டணங்கள் 65% அதிகரிப்பு
இலங்கையில் மின்சார கட்டணங்கள் சராரசியாக 65 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண அதிகரிப்பின் காரணமாக சாதாரணமாய் 120 கிலோவாட் மின்சார பயன்பாட்டுக்காக மாதக் கட்டணம் ரூ.1500 செலுத்திவந்த ஒருவர், புதிய விலையின் கீழ் ரூ.2500 செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தாம் ஒப்புதல் கேட்டிருந்த புதிய மின் கட்டணங்களுக்கு இலங்கையின் பொது சேவைகள் ஒழுங்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது என சிலோன் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
முழுக்க முழுக்க அரசு நிறுவனமாக இயங்கிவருகின்ற சிலோன் மின்சார வாரியத்துக்கு ரூ.5000 கோடி நஷ்டம் உள்ளது.
இந்த நஷ்டத்தைக் குறைக்க மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது என்று அது தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 12ஆம் தேதி முதல் இந்த புதிய விலைகளின் கீழ் மின் கட்டணங்கள் வசூலிக்கப்படவுள்ளன.
இலங்கையில் பெருமளவான மின் உற்பத்தி நிலக்கரியைக் கொண்டும் டீசலைக் கொண்டுமே நடப்பதால், நீர் மின் உற்பத்தி முறைபோல் அல்லாது மின் உற்பத்திச் செலவு மிக அதிகமாக உள்ளது என்பதை இலங்கை மின்சார வாரியம் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் பல்லாண்டுகாலமாக நீடித்துவரும் மோசமான நிதி நிர்வாகமும் ஊழலுமே இலங்கை மின்சார வாரியத்தின் கடன் சுமை இந்த அளவுக்கு அதிகமாக இருக்கக் காரணம் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விலையேற்றத்தின் காரணம் என்ன?மின் கட்டண அதிகரிப்புக்கான காரணங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பொருளாதார ஆய்வாளர் முத்துகிருஷ்ண சர்வானந்தா, முப்பது ஆண்டுகாலமாக இருந்துவருகின்ற பல்வேறு பிரச்சினைகளுமாகச் சேர்ந்து இலங்கை அரசாங்கத்தை இந்த அளவுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது என்று சொன்னார்.
இலங்கையில் பல்வேறு அரச துறைகளும் நிறுவனங்களுமே கோடிக் கணக்கான ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர இலங்கையிலே பெரிய பெரிய நிறுவனங்கள் கூட மின்சாரத்தை திருடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார வாரியம் முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும்வரை இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
தற்போதைய மின் கட்டண அதிகரிப்பு இலங்கை மின்சார வாரியத்தை பகுதியளவிலாவது தனியார் மயமாக்க வேண்டும் என்ற வாதத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் என்று தான் கருதுவதாக பொருளாதார ஆய்வாளர் முத்துகிருஷ்ண சர்வானந்தா தெரித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply