ஐந்து மாவட்டங்களில் 20 சுயேச்சைக் குழுக்கள் நேற்றுவரை கட்டுப்பணம் செலுத்தின
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு இதுவரை 20 சுயேச்சைக் குழுக்கள் ஐந்து மாவட்டங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என்று பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார்.எனினும் கடந்த இரண்டு தினங்களில் இதுவரை எந்தவொரு கட்சியின் சார்பிலும் எந்த மாவட்டத்திலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் செய்யும் பணிகள் நேற்று முன்தினம் 30 ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து இரண்டு மாகாணங்களினதும் ஆறு மாவட்டங்களிலும் ஆரம்பமாகின.
அந்தவகையில் இதுவரை 20 சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் கம்பஹா மாவட்டத்தில் 3 சுயேச்சைக் குழுக்களும் களுத்துறை மாவட்டத்தில் 4 சுயேச்சைக் குழுக்களும் காலி மாவட்டத்தில் 2 சுயேச்சைக் குழுக்களும் மாத்தறை மாவட்டத்தில் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்த சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தவில்லை என்றார்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் ஆறு மாவட்ட செயலகங்களில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வேட்பு மனு நிலையங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
எதிர்வரும் ஆறாம் திகதிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்பதுடன் ஐந்தாம் திகதி நண்பகல் 12 மணிவரை சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும்
இரண்டு மாகாணங்களிலும் 5898427 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். மேல் மாகாணத்தில் 102 பிரதிநிதிகளையும் 53 பிரதிநிதிகளையும் தெரிவு செய்யும் நோக்கிலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் நிறைவடையும் தினத்தன்று தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூல வாக்களிப்புக்கான காலப்பகுதி பெப்ரவரி 10 ஆம் திகதிவரை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தலுக்காக 120 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது என்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி எவரும் வாக்களிக்க முடியாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply