ஆர்.கே.நகரில் நள்ளிரவு நடந்த பண பட்டுவாடா: ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம்

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க. மூன்றாக உடைந்தது. சசிகலா தரப்பில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தீபா தலைமையில் தனித்தனி அணியும் உருவானது. இதற்கிடையே ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இது மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இந்த தேர்தல் கவுரவ பிரச்சினையாக கருதப்படுகிறது. எனவே இடைத்தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் தி.மு.க., டி.டி.வி.தினகரனின் அ.தி.மு.க. அம்மா கட்சி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி போன்ற கட்சி தொண்டர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு கட்சியிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு படையெடுத்து வந்து, முகாமிட்டு உள்ளனர். பிரசாரம் ஒருபுறம் இருந்தாலும், வாக்காளர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் பண பட்டுவாடா தாராளமாக நடக்கலாம் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

வழக்கத்தை விட கூடுதலாக 3 மடங்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து 8-ந்தேதிக்கு மேல் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யும் முடிவில் இருந்தவர்கள், நேற்று இரவு விடிய விடிய கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டனர்.

பண பட்டுவாடாவுக்கு வசதியாக ஏற்கனவே வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வைத்திருந்தனர். ஒவ்வொரு வீட்டின் வெளியிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்? என்பதை குறியிட்டு சென்றிருந்தனர். அதன் அடிப்படையில் நேற்று ஒவ்வொரு வீடாக சென்று ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் (இரண்டு ரூ.2 ஆயிரம் நோட்டு) வினியோகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜிநகரில் மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்துகொண்டு இருந்தார். இதை அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் ஷேக், பார்த்தசாரதி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அப்பாஸ் ஆகியோர் தட்டி கேட்டனர். உடனே பிரபுவுக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து, 3 பேரையும் தாக்கினர். அரிவாள் வெட்டும் விழுந்தது. இதனைத்தொடர்ந்து காயம் அடைந்த 3 பேரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகரில் வாக்காளர்களுக்கு அரியலூரை சேர்ந்த சங்கர் என்பவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.37 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று கொருக்குப்பேட்டை அஜீஸ்நகர் 3-வது தெருவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக சீனிவாசன் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் பணம் வைத்திருப்பதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

காசிமேடு காசிபுரம் பகுதியில் ராஜா, மணிபாரதி, முருகன், சந்திரமோகன் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று நள்ளிரவு தொகுதி முழுவதும் நடந்த பண பட்டுவாடாவால் தேர்தல் கமிஷன் அதிர்ச்சி அடைந்துள்ளது. எனவே மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. கூடுதல் துணை ராணுவப்படையும் வரவழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண பட்டுவாடா வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் விடுதலை ஆகிவிடுவதால், அவர்கள் மீண்டும் பண பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தேர்தல் கமிஷனுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இனிமேல் பண பட்டுவாடா புகாரில் கைது செய்யப்படுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 6 மாதம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு எடுத்ததாக தெரிகிறது.

ஆர்.கே.நகரில் 50 சதவீத வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே மீதமுள்ள வாக்காளர்கள் தங்களுக்கு பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் பண பட்டுவாடா செய்ய தயாராக இருந்த கும்பல் பணத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பண பட்டுவாடா செய்ததாக கைது செய்யப்பட்ட அனைவரும் அ.தி.மு.க. அம்மா கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply