வழிதவறி சென்றவர்கள் நல்வழிக்கு திரும்பி எங்களோடு இணைய வேண்டும்: ஓபிஎஸ் அணிக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் வழிதவறி சென்று விட்டார்கள் அவர்கள் மீண்டும் நல்வழிக்கு திரும்பி தங்களோடு இணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது

“தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் நலனுக்காக செயல்பட்டவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மட்டும் தான். அவர்கள் செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் காரணமாகவே நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பதவியில் இருக்கிறோம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உழைப்பால் மட்டுமே அதிமுக, இந்தியா அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. இந்த தருணத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.

மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்று பலரும் பகல் கனவு கண்டு வருகிறார்கள் அது பலிக்காது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்து எனக்கு முன் பேசியவர்கள் கூறினார்கள், ஏதோ வழி தவறி சென்று விட்டார்கள், அவர்கள் மனம் மாறி மீண்டும் நல்வழிக்கு திரும்பி எங்களோடு இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் இரு அணிகளும் இணைய வேண்டும். ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல, அப்படி இருக்கும் போது இந்த ஆட்சி தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும், அதற்கு இரு அணிகளும் இணைய வேண்டும்”

இந்த விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று டெல்லியில் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தாம தமாவதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது பொருத்திப்பார்க்கத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply