பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க காணாமற்போயுள்ளார்

அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, பதவிக்காலத்தின் பின்னர் காணாமற்போயுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, ஏப்ரல் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவிருந்தார்.

பதவிக்காலம் நிறைவு பெற்றதன் பின்னர், பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க ஒரு மாத வெளிநாட்டு விடுமுறை பெற்றிருந்ததுடன், அவர் மீண்டும் மே மாதம் கடமைக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தது.

வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் அவர் வகித்த பதவிக்கு ஏற்கனவே கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க இதுவரை கடமைக்கு சமூகமளிக்காததால், அவரை இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவராகப் பெயரிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இவர் தலைமறைவாகியுள்ளதால், வெளிவிவகார அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டதாக இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply