தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தவே பொருளாதார சபை நிறுவப்பட்டது : ஜனாதிபதி

நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தை முறைப்படுத்தி தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகவே தேசிய பொருளாதார சபையை நிறுவுவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் தேசிய கைத்தொழிற்துறையின் அபிவிருத்தி என்பன இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றன. விவசாய நாடு என்ற வகையில் விவசாயத்துறையின் அபிவிருத்திக்கான மிக வலுவானதொரு செயற்திட்டத்தின் தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதுடன், கைத்தொழில் அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் பொறுப்பினையும் மேலும் சிறப்பாக நிறைவேற்றுவதே தேசிய பொருளாதார சபை நிறுவப்படுவதற்கான நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை தேசிய கைத்தொழில் சபையின் வருடாந்த திட்டமிடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய பொருளாதார சபையினை நிறுவுவதற்கு முன்னர் உலக வங்கியினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் பிரதிநிதிகளுடனும், தேசிய பொருளாதார துறை நிபுணர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் எமது நாட்டைச் சேர்ந்த நிபுணர்களுடன் தான் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான முறையானதும், வினைத்திறனானதுமான செயற்திட்டத்தின் தேவையை நிறைவேற்றுவதன் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபையின் செயற்பாடுகளுக்கு அனைவரது ஒத்துழைப்பினையும் தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, உள்நாட்டு கைத்தொழில்களுக்கும், வர்த்தகர்களுக்கும் அநீதி ஏற்படும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ அமைந்த எந்தவொரு வர்த்தக உடன்படிக்கையிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என்றும் தெரிவித்தார்.

வர்த்தகத்துறையை சாராத ஒரு பிரிவினரால் வர்த்தக சமூகத்தினருக்கு தவறான தகவல்கள் வழங்கி அவர்களை அச்சுறுத்துவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய கைத்தொழில்களை பாதுகாப்பதுடன், தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் கொள்கையுடனேயே அரசாங்கம் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் வலியுறுத்தினார்.

தேசிய கைத்தொழில் அபிவிருத்திக்காக கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் அனுசரணை போதுமானதாக அமையவில்லை என்றும், தேசிய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்து சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தேசிய கைத்தொழில் சபையினால் 16 ஆவது முறையாக இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பாரிய அளவிலான மற்றும் மிக விசாலமான கைத்தொழில் துறைகளின் கீழ் 16 வர்த்தக நிறுவனங்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

அரச துறையின் கைத்தொழில்கள் மூன்றிற்கும் இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன. லிட்ரோ வாயு, கால்நடை வளங்கள் மற்றும் கணிய எண்ணெய் சார்ந்த கைத்தொழில் துறைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அத்துரலியே ரதன தேரர், இலங்கை தேசிய கைத்தொழில் சபையின் தலைவர் திஸ்ஸ செனெவிரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்களும், அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply