காமெடி நடிகராகி விட்டார் முக ஸ்டாலின் – அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட கால்கோல் விழா நடைபெற்றது. அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலெக்டர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர்களை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் அரசியல் கருத்துக்கள் பேசலாம்.

ஆனால் கூட்டணி குறித்து ஆட்சிமன்ற குழுக்கள் மற்றும் தலைமை தான் முடிவெடுக்கும். அதுவும் தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து நிற்பது போல் தான் தற்போது வரை பணியாற்றி வருகிறோம். 40 தொகுதிக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

தனித்து நிற்பதா? கூட்டணி வைப்பதா? என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. ஊர் ஊராக சென்று ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார்.

எம்.ஜி.ஆர். இருக்கும் வரை 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது தி.மு.க தான். துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த போது எந்த ஒரு ஊருக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்கவில்லை.

கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் மக்களிடத்தில் தற்போது வரை பொய்யாக பேசிக் கொண்டு வருகிறார். தி.மு.க. ஆளுங்கட்சியாக வந்தால் குடும்பத்தை மட்டுமே நினைக்கும் ஒரு கட்சியாக மாறும். இதுதான் மக்கள் கூறும் கருத்து.

ஸ்டாலின் தற்போது நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார். மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். மத்திய பட்ஜெட் எனது பார்வையில் மிக சிறப்பாக உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வருடம் முடிந்து விட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் தீயில் பாதிக்கப்பட்ட மண்டபம் பழமை மாறாமல் அதே நிலைக்கு மீண்டும் திரும்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply