கம்யூட்டர்களை ஹேக் செய்த ‘வான்னாகிரை’ தாக்குதலுக்கு வட கொரியாவே பொறுப்பு: அமெரிக்கா

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெக் உலகின் அசுரர்களாக உருவெடுத்த ‘வான்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ரான்சம்வேர் எனும் ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது.

குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலகமுழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை.

இந்த வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளது.

இணைய உலகை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கிய இந்த வைரஸானது வடகொரியா மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல குறியீடுகள் காணப்படுவதாக காஸ்பஸ்கை உள்ளிட்ட பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனங்கள் கூறியிருந்தது. லாசரஸ் குரூப் எனப்படும் பிரபல சைபர் கிரைம் குழு கடந்த 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களையும்,2016-ம் ஆண்டில் வங்காளதேசத்தை சேர்ந்த வங்கிகளின் கணினிகளை ஹாக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக தென்கொரியாவுக்கு எதிராக தொடர்ந்து இயங்கிவரும் இந்த சைபர் கிரைம் குழு வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என்று கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இந்த லாசரஸ் குரூப் உருவாக்கிய வைரஸ்களின் தரவுகளும் தற்போது பரவிவரும் ரான்சம்வேர் வைரஸின் தரவுகளும் ஒன்று போலவே இருப்பதாக கணினி வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் வடகொரியா திட்டவட்டமாக மறுத்திருந்தது. மேலும், உலகில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை இழுத்து விடுவது மிகவும் கேலிக்குறியதாக உள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இங் ரியோன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் போஸ்ஸெர்ட், ‘வான்னாகிரை’ தாக்குதலுக்கு வட கொரியாவே பொறுப்பு என்று கூறியுள்ளார். பல ஆண்டுகளாக வடகொரியா மொசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தீங்கிழைக்கும் நடத்தை மிகவும் அதிர்ச்சிக்குரியதாக இருப்பதாக டாம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply