திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி: விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்த சனி பகவான்

திருநள்ளாறில் புகழ்பெற்ற சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சனி தோ‌ஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது.இதில் அனுக்கிரக மூர்த்தியாக அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனி பகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி இங்கு சனிப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா நேற்று இரவு முதல் தொடங்கியது. அதன்படி சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார், இந்த நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீனம் சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை சனி பகவானுக்கு நல்லெண்லெணை, மஞ்சள், திரவியப்பொடிகள், சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலக நன்மைக்காக 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு சங்கல்பம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.

சரியாக காலை 10.01 மணிக்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது சனி பகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை தரிசனம் செய்தனர்.

சனி பகவானை வழிபட தமிழகம், புதுவை மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், வேன் மற்றும் கார்களில் நேற்று இரவு முதலே திருநள்ளாறு வரத்தொடங்கினர். இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை முதல் நளதீர்த்தத்தில் புனித நீராடினர். அதன் பின்னர் அவர்கள் அங்குள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டு கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.

பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக குளத்தில் உள்ள பழைய தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு அங்கு புதிதாக மணல் நிரப்பி தண்ணீர் விடப்பட்டு இருந்தது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் குளத்தில் புனிதநீராடினர்.

ஏராளமான பக்தர்கள் புனித நீராடியதால் குளத்திலிருந்து பழைய தண்ணீரை வெளியேற்றி, 2 மோட்டார்கள் மூலம் புதிதாக தண்ணீர் விடப்பட்டன. மேலும் குளத்தை சுற்றிலும் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பெண்கள் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நளன்குளத்தில் மீட்பு படகு மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி இலவச தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண தரிசனம், நன்கொடையாளர்கள் தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என்று 5 தரிசன பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

அதன் வழியாக பக்தர்கள் வரிசையாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக வரிசைகளின் மேற்பகுதியில் நிழல் தரும் கூறை அமைக்கப்பட்டு இருந்தது.

முன்பு சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சியின் போது இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சனி பகவானை மட்டும் தரிசனம் செய்ய முடிந்தது. சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்ய முடியாது. கட்டண தரிசனம் செய்பவர்கள் மட்டுமே சுவாமி, அம்மன் மற்றும் சனி பகவானை தரிசனம் செய்து வந்தனர்.

தற்போது அனைத்து பக்தர்களும் சுவாமி, அம்மன் மற்றும் சனி பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கருதி அனைத்து நுழைவாயில் களிலும் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டிருந்தது. மெட்டல் டிடெக்டர் சோத னைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனு மதிக்கப்பட்டனர்.

விழாவையொட்டி கடலூர், விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி, கும்பகோணம், திருச்சி, மயிலாடுதுறை, கோவை, சேலம், புதுவை மற்றும் சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருநள்ளாறில் பஸ்கள், வேன்கள் கார்கள் நிறுத்து வதற்கு தனித்தனியாக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. திருநள்ளாறு பஸ் நிலைய வளாகத்தில் வி.ஐ.பி.க்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்களின் வசதிக்காக 80-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தன.இதுதவிர முக்கிய இடங்களில் நிரந்தர கழிவறைகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலின் பல்வேறு பகுதிகளில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. திருநள்ளாறில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்த தால் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாதாரண உடை அணிந்தும் போலீசார் ஆங்காங்கே நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காரைக்கால் நகர போலீஸ் நிலையம், நளன்குளம், கோவில் அலுவலகம் ஆகிய இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply