கங்காருகள் மனிதர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும் திறன் பெற்றவை: ஆய்வில் தகவல்

கங்காருகள் மனிதர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும் திறன் பெற்றவை:  ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழும் அதிசய விலங்கு கங்காரு. இந்த விலங்கின் வயிற்று பகுதியில் பை போன்ற அமைப்பு காணப்படும். கங்காரு தனது குட்டியை கர்ப்ப காலத்தில் சுமப்பதுடன், குட்டியை ஈன்ற பின்னரும் சிறிது காலம் வரை அதனை, இயற்கையாக அமைந்த பை ஒன்றில் வைத்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. குட்டியை சுமந்தபடியே குதித்து, குதித்து சென்று இரை தேடும்.

இதன் பின்னங்கால்களுடன் ஒப்பிடும்பொழுது, முன்னங்கால்கள் சரியாக வளர்ச்சி அடையாமல் காணப்படும். வன பகுதிகளில் சுற்றி திரியும் கங்காரு விலங்கு, ஆடு, நாய், குதிரை உள்ளிட்ட மற்ற விலங்குகளை வளர்ப்பது போன்று மனிதர்களால் வளர்க்கப்படுவது இல்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை கழகத்துடன் இணைந்து, ஹாங்காங்கின் சிட்டி பல்கலை கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதன்படி, மூடப்பட்ட பெட்டி ஒன்றில் கங்காருவுக்கு தேவையான உணவு பொருள் வைக்கப்பட்டது.

அதனை கண்ட கங்காரு, வளர்ப்பு பிராணிகளை போல் செயல்பட்டு ஆச்சரியப்படுத்தியது. அந்த பெட்டியை தன்னிச்சையாக திறக்க முயல்வதற்கு பதிலாக, உணவு வைத்த நபரை பார்த்தபடியே இருந்துள்ளது.

3 வெவ்வேறு இடங்களில் நடந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 11 கங்காருகளில் 10 கங்காருகள், பெட்டியில் உணவு வைத்த நபரையே உற்று நோக்கின. இந்த 11 கங்காருகளில் 9 கங்காருகள் கூடுதலாக பெட்டியையும், மனிதரையும் மாறி மாறி பார்த்தன. இது தகவல் தொடர்பின் உச்ச நிலையாக அறியப்படுகிறது.

ஆடுகள், நாய்கள் போன்ற வளர்ப்பு பிராணிகளிடம், மனிதர்களுடனான தகவல் தொடர்பை அறிவதற்காக இதற்கு முன்பு நடந்த பரிசோதனையின் அடிப்படையிலேயே இந்த சோதனையும் நடந்துள்ளது. அதில், ஆச்சரியப்பட கூடிய முடிவுகள் கிடைத்துள்ளன என ரோஹேம்ப்டன் பல்கலை கழகத்தில் பணியாற்றும், ஆராய்ச்சியின் தலைமை ஆய்வாளர் ஆலன் மேக்எல்லிகாட் கூறுகிறார்.

இந்த புதிய ஆய்வில் இருந்து விலங்குகளிடையே உள்ள தகவல் தொடர்பு பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனினும், உணவை அடைவதற்காக மனிதர்களை எதிர்நோக்கி இருக்கும் அவற்றின் அணுகுமுறை, அந்த விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கான முயற்சியுடன் தொடர்புடையதல்ல.

ஏனெனில், ஆடு, குதிரை போன்ற விலங்குகளுக்கு நடந்த இதேபோன்ற பரிசோதனையில் கிடைத்த முடிவுகளே கங்காருகளிடம் இருந்தும் கிடைத்துள்ளன என அவர் கூறியுள்ளார். இதனால் வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பிற விலங்குகளிடம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உறுதுணையாக இந்த ஆய்வு முடிவு அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply