ஜஸ்டின் ட்ரூடோவின் நிகழ்வில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள்: இந்தியா கடும் எதிர்ப்பு துணை தூதுவரை மீளப்பெற்றது

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டததால் கனடாவுக்கான இந்தியாவின் துணைத் தூதுவரை இந்தியா மீளப்பெற்றுள்ளது.

“கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு அரசியல் இடம் கொடுக்கப்பட்டுள்ளதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது” என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டொரோண்டோவில் கல்சா தின கொண்டாட்டத்தில் பேசுவதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவோம் வந்திருந்தார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றி கொண்டிருந்த தருணத்தில் காலிஸ்தான் சார்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு அவர் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.

இதுகுறித்து ஆழ்ந்த கவலை மற்றும் வலுவான எதிர்ப்பை இந்தியா வெளியிட்டுள்ளது.

இது போன்ற வெளிப்பாடுகள் இந்தியா-கனடா உறவுகளை பாதித்தது மட்டுமல்லாமல், கனடாவில் வன்முறையை ஊக்குவிக்கிறது. இது நாட்டின் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் இந்தியா கூறியுள்ளது.

கல்சா தின அணிவகுப்பில் உரையாற்றிய ட்ரூடோ, சமூக மையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தனது அரசாங்கம் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

“இந்த நாடு முழுவதும் வாழும் ஏறத்தாழ 800,000 சீக்கிய பாரம்பரியத்தை கொண்ட கனேடியர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்க நாங்கள் எப்போதும் இருப்போம்.

உங்கள் சமூகத்தை வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் எப்போதும் பாதுகாப்போம்” என்றும் கனேடிய பிரதமர் கூறினார்.

கடந்த ஆண்டு கனடாவில் காலிஸ்தான் சார்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் முறிந்தன.

இந்தியா இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்தது.”அபத்தமானது மற்றும் ஆதாரமற்றது” என்று கூறியது. மேலும் நாட்டிற்கான விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் முறுகல் போக்கே நிலவுகிறது. இவ்வாறான பின்புலத்திலேயே ஜஸ்டின் கனேடிய பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் காலிஸ்தான் கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply