தலைநகர் கொழும்பில் பலத்த பாதுகாப்பு: மே தினக் கூட்டங்களில் இலட்சக்கணக்கில் திரள உள்ள மக்கள்

உலகத் தொழிலாளர் தினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மே தினம் இன்றாகும்.உலகம் முழுவதும் தொழிலாளர்களால் கொண்டாடப்படும் இந்த நாள் உருவான வரலாறு என்பது மிகவும் இரத்தக்கறை படிந்தது.

போராட்டமே விதையாய் அமைந்தது

சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு.

நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால், உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான பிரதிபலன் கிடைக்கிறதா என்பது இன்றளவும் கேள்விக்குறியே.

8 மணி வேலை, அடிப்படை ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி, காப்பீடு, பெண்களுக்குப் பணியிடத்தில் கிடைக்கும் உரிமைகள், தொழிற்சங்கங்கள் என இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் மே தினப் போராட்டமே விதையாய் அமைந்தது.

தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின

இந்த மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது நம் கடமையும் கூட. 1800 களில் தொழிற்துறை வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் 20 மணி நேரம் வரை வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை எனத் தொழிலாளர்கள் பல வகைகளில் சுரண்டப்பட்டனர்.

இந்தச் சுரண்டலை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1806ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கியபோதே, அவர்கள் கடினமாக வேலை வாங்கப்பட்டது உலகிற்குத் தெரியவந்தது.

பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின.

8 மணி நேர வேலை

அதேபோல பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமையும் இச்சங்கத்துக்கே உண்டு. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலை நாள் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் பத்து மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடி அதில் வெற்றியும் கண்டனர்.

இதனைத் தொடர்ந்து குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் எல்லா வளரும் நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1858ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றனர்.

1884இல் அமெரிக்காவில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணங்களாய் அமைந்தன.

1886 மே முதலாம் திகதி சிகாகோவில் திரண்ட தொழிலாளர்கள்

1884, அக்டோபர் 7ஆம் நாள் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில், 1886ஆம் ஆண்டு மே முதல் நாள் முதல், வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில மாதங்களுக்குப் பின் 1885இல் நடைபெற்ற மாநாட்டில், முந்தைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்து போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

1886 மே முதலாம் திகதி சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர வேலைக்காகப் போராடினர். இதனைத் தொடர்ந்து போராடியவர்களைக் கைது செய்தும், அடக்குமுறையைக் கையாண்டும் போராட்டத்தைக் கலைக்க அரசு முயன்றது.

தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன

இந்த அடக்கு முறையை எதிர்த்து மே 4ஆம் திகதி வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட, இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.

1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1889ஆம் ஆண்டு மீண்டும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1889ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில், எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தைச் சட்டப்பூர்வமாக்கக் கோரி போராடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக 1890 மே முதல் நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என மாநாடு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன.

1890ஆம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மே தினக் கொண்டாட்டம் சிறிது சிறிதாகப் பல்வேறு நாடுகளில் பரவியது.

தற்போது 80 நாடுகளுக்கும் மேல் மே முதலாம் திகதியை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளன. இந்தியாவின் மே தினம் முதல் முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில்தான்.

இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம்

இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923ஆம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். அதே போல இந்தியாவில் முதன்முதலில் மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது கேரளாவில்தான். 1957ஆம் ஆண்டு கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது.

இலங்கையின் ஆரம்ப காலத்தில் மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.

இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ஆம் ஆண்டு தொழில் சங்க தலைவரான குணசிங்க தலைமையில் நடைபெற்றது.

பணத்துக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக மாறியுள்ள மக்கள்

இதில் ஆண்கள் கோடிட்ட சிவப்பு பெனியன்கள் மற்றும் வெள்ளை சாரன் அணிந்ததாகவும் பெண்கள் சிவப்பு நிற ஜாக்கட் அணிந்து, மேள தாள நடனத்துடன் தற்போதைய Price Park முதல் Galle Face Green மைதானம் வரை நடைப்பெற்றதாக சித்தரிக்கப்படுகின்றது.

இதுவே 1956 ஆம் ஆண்டு S. W. R. D.பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

1891ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த A. E. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்திற்கு பாரிய சேவை செய்தவராக இலங்கை வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை வென்றுள்ளார் என்பதோடு, இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாக அறியப்படுகிறார்.

இலங்கையில் ஆரம்ப காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தை மையமாகக் கொண்ட மே தின ஊர்வலங்கள் நடத்தப்பட்டாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளதோடு, அரைப் போத்தல் மதுபானத்திற்கும், 1000, 2000 ரூபாய் பணத்திற்கும் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக எம் மக்கள் மாறியுள்ளனர் என்பது வேதனை அழிக்கின்றது.

மே தினக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன

இவ்வாறு போராடிப் பெறப்பட்ட தொழிலாளர்களின் பல உரிமைகள் பறிபோகத் தொடங்கியுள்ளன. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போக வைக்கக் கூடிய வகையிலான மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. போராடிப் பெற்ற உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்வது எவ்வாறு நமது உரிமையோ, அதேபோல அவற்றைத் தக்க வைப்பதும் நமது கடமையாகும்.

இன்று கொழும்பின் பல்வேறு இடங்களில் பிரதானக் கட்சிகள் தங்கள் மே தினக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

மாலிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியும், நுகேகொடையில் ஐக்கிய மக்கள் சக்தியும், லிப்டன் சுற்று வட்டத்தில் தேசிய மக்கள் சக்தியும், கெம்பல் பார்க்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தமது மே தினக் கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.

கொழும்பின் பல்வேறு நகரங்களில் மே தினக் கூட்டங்கள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கொழும்பு நகரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதானக் கட்சிகள் அனைத்தினதும் மே தினக் கூட்டங்கள் கொழும்பில் நடைபெறுவதால் இலட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிநது.

5000 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மே தினக் கூட்டங்கள் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. அதற்கான மாற்று வீதிகளையும் பொலிஸார் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply