சர்வதேச தொழிலாளர் தினம்: நாடகத்திற்கு தயாராக நிற்கும் அரசியல் கட்சிகள் : கொண்டாடும் தகுதி யாருக்கு இருக்கிறது?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இன்று (01) சர்வதேச உழைப்பாளர் தினத்தை கொண்டாடத் தயாராகியுள்ளன.

அதேபோன்று தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆங்காங்கே மே தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகியுள்ளன.

ஆண்டுதோரும் ஒவ்வொரு மே மாதம் 1ஆம் திகதியும் அனுஷ்டிக்கப்படும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்திற்குப் பின்னால் எத்தனையோ போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள், அர்ப்பணிப்புகள் இருந்தாலும் இன்றளவில் மேதினம் ஒரு நாள் விடுமுறை, அரசியல் பேரணி, தொழிற்சங்க கூட்டம், சோற்றுப்பார்சல், குத்தாட்டம் இவ்வளவோடு அன்றைய நாள் முடிந்துவிடுகிறது.

பல தலைமுறைகளாக முதுகொடிய உழைத்து ஓடாய்த் தேய்ந்த தொழிலாளர்களை இப்படியொரு நிலைக்கு கொண்டுவந்து விட்டது யார்?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆரம்பத்தில் மே தினம் ஒரு நோக்கத்தோடு கொண்டாடப்பட்டாலும் படிப்படியாக அது இல்லாதுபோய் அரசியல் கூட்டமாகவும், தொழிற்சங்கம் வளர்ப்புக்கான கொண்டாட்டமாகவும் தமது புராணம் பாடும் நாளாகவும் மட்டுமே இருக்கின்றன.

இம்முறையும் இப்படியானதொரு மேதினத்தைக் காணவா நாடு தயாராகியுள்ளது? உண்மையிலேயே தொழிலாளர்களின் நலனுக்காக எதை செய்துவிட்டார்கள்? எதை வைத்து இந்த மேதினத்தை தலைமைகள் கொண்டாடப் போகின்றன?

மேடைக்கு மேடை தொழிலாளர்களின் தோழன் என அரிதாரம் பூசிக்கொள்ளும் எந்தத் தலைவனுக்குத்தான் இந்த தினத்தைக்கொண்டாட தகுதி இருக்கிறது?

அரியணையில் இருப்பவர்கள் கொஞ்சம் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள். இத்தனை கேள்விகளுக்கு மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும்.

உழைப்புக்கேற்ற ஊதியம், நியாயமாக கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள், சலுகைகள், உரிமைகள் எல்லாவற்றையும் இழந்து இன்றும் பல தொழிலாளர்கள் ஒருவேளை உணவுக்கு போராடும் நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், இம்முறை அத்தனை கட்சிகளும் தேர்தல் பிரசாரத்துக்கான பரப்புரைகளை மட்டுமே கொண்டு மேதின மேடை ஏறுகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் தமது பலத்தை எப்பாடு பட்டாவது நிறுபித்துவிட வேண்டுமென பிரயத்தனம் காட்டுகின்றன.

ஒட்டுமொத்த தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் குறித்து பேசும் நிலையில் எந்தவொரு தரப்பும் இல்லை. ஒருசில சிவில் சமுக அமைப்புகள் மட்டுமே தொழிலாளர்களை கௌரவிக்கும் தினமாக இன்றைய தினத்தை கொண்டாடுவதற்கு எத்தனித்துள்ளன.

ஆகவே, மே தினம் தொழிலாளர்களுக்காக அவர்களின் உரிமைகளை பேசும் தினமாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படியானால் இம்முறை மேதினத்தைக் கொண்டாடும் தகுதி, தைரியம் யாருக்குதான் வாய்க்கும்…

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply