இன்று புனித வெள்ளி
விண்ணில் கடவுள் அவர்! மண்ணில் அவதரித்ததால் மானிட மகனானார். பரமபிதா தொடக்கிய மீட்பு திட்டத்தின் முழுமையும் நிறைவும் அவரே! படைப்பில் ஆதி பெற்றோர் இழைத்த பாவத்தின் நீட்சியாக மனுக்குளத்தை சாபமும் பாவமும் கூறுபோட, இறைமகன் தன் புனித குருதி கொண்டு, உயர் தியாகம் செய்து மனுக்குலத்தின் பாவங்களை எல்லாம் கழுவி புனிதம் செய்த நாளே புனித வெள்ளி…
இன்று புனித வெள்ளி. பெரிய வெள்ளி என்று அழைக்கப்படும் நாளும் இதுவே. இன்றைய நாள் உலகில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கும் மிக மிக முக்கியமான பரிசுத்தமான நாள்.
இன்று பலர், கிறிஸ்துவினுடைய துன்பியிலான சிலுவை சாவுக்கும், அவர் மனிதர் நமக்காக செய்த அளப்பெரிய தியாகத்திற்காகவும் உண்ணா நோன்பு இருக்கின்றார்கள், களியாட்டம், கொண்டாட்டங்களை தவிக்கின்றார்கள். இது கிறிஸ்தவர்களை பொருத்தமட்டில் துக்கமான நாள். புனிதமான நாளும் கூட! அவமானம் என்று கருதப்பட்ட சிலுவை, அவமானத்தின் அடையாளம் என்று யூதர்களால் அழைக்கப்பட்ட இந்த சிலுவை- இன்று இயேசுவின் விலைமதிப்பில்லா குருதிபட்டு புனிதம் பெறுகின்றது. அவமானத்தின் சின்னம் என்று அழைக்கப்பட்ட சிலுவை – திருச்சிலுவையாக மாறுகின்றது.
மனுக்குலத்தின் இரட்சணியமாகவும் மாறுகின்றது! ரோமைத் தலைவா்களும், யூத சமயத் தலைவா்களும் இயேசுவிற்கு சாவுக்குரிய தண்டனை வழங்குகின்றார்கள். பின் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று தீா்ப்பளித்தனா். ரோமை அரசின் உச்சபட்ச தண்டனை இயேசுவிற்கு வழங்கப்பட்டது. புனித வெள்ளி அன்று இயேசு கொடுமையாகத் தாக்கப்பட்டாா், அடிக்கப்பட்டாா். மரத்திலான ஒரு பெரிய சிலுவையைச் சுமக்குமாறு வற்புறுத்தப்பட்டாா். இறுதியாக அந்த சிலுவையில் அவருடைய கைகளும், கால்களும் இணைக்கப்பட்டு ஆணிகளால் அடிக்கப்பட்டன. கிறிஸ்துவின் இத் தும்பியல் நிலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தன்னுடைய இறுதி மரண வேளையில் எல்லோராலும் கைவிடப்பட்டவராகவே கருதினார்.
இறுதியாக தன் தந்தையை நோக்கி எழுப்பிய அவலம் நிராகரிக்கப்பட்டபோதும், இறை தந்தையிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்காதபோதும் தன் தந்தையிடம் கொண்ட நம்பிக்கையில் இருந்து இம்மியளவும் பின்வாங்காமல் சிலுவையின் ஆணிகள் நடுவில் எல்லோரையும் மன்னித்து, தான் போதித்த வார்த்தைகளை எல்லாம் மெய்ப்பித்து மனக்குலத்திற்கு பாவ மன்னிப்பு ஈர்ந்து தன் உயிரை தன் தந்தையிடம் கையளிக்கின்றார்.
இயேசு, இந்த மனித குலம் மீட்படைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு தனது உயிரைத் தியாகம் செய்தாா் என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் இன்றைய நாளில் மட்டும் அல்ல, ஒருபோதும் மறப்பதில்லை. இன்றைய நாளில் தேவாலயங்கள் அலங்காரங்கள் இல்லாமல், விளக்குகள் ஏற்றப்படாமல் வெறுமையாக இருக்கும். இன்றைய நாளில் பிற்பகல் 3 மணி, அதாவது கிறிஸ்து மரணமடைந்த மாபெரும் இரக்கத்தின் நேரத்தில் தேவாலயங்களில் மாலை ஆராதனை இடம் பெறுகின்றது.
கிறிஸ்துவின் மரணத்தை முழுமையாக நினைவுகூறுகின்ற இந்த மாலை வழிபாட்டில் கிறிஸ்துவின் தியாகத்தை நினைவில் கொண்டு வழிபாடுகளில் பங்கெடுப்போம். எனவே இந்த புனிதமான வெள்ளி தரும் வாழ்வை புனிதமாக காப்போம். கிறிஸ்து தம் விலை மதிப்பில்லா குருதி கொடுத்து தந்த இந்த புனித வாழ்வை அர்த்தத்தோடு வாழ்வோம். வன்மமும் பகையும் குரோதம் நிறைந்த வாழ்வில் கிறிஸ்துவின் சிலுவையின் சாட்சிகளாய் ஒருவர் ஒருவரை மன்னித்து ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவ வாழ்வின் அர்த்தங்களை சரி செய்து வாழ எமக்காய் அறையப்பட்ட கிறிஸ்துவின் பாதங்களை தொட்டு புனிதம் பெறுவோம்.
குறிப்பாய் இன்றைய வழிபாட்டில் திருச்சிலுவை நாம் முத்தி செய்கின்ற போது அவர் நமக்காய் பாடுபட்ட அந்த உன்னத அன்பிற்காக நன்றி கூறி அவருடைய காயப்பட்ட பாதங்களை முத்தி செய்வோம்.
அருட்பணி S.X ரவிகாந் CMF
பங்குத்தந்தை
தூய மருத மடு அன்னை ஆலயம்,
என்சல்வத்த பங்கு
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply