பிள்ளையான் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் விசாரணை

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம், அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (22) நடைபெற்றபோது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்றன.

அவை தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த விசாரணைகள் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் பொலிஸ்துறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும்.

சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும். அவை தொடர்பாகவும் விசாரணை முன்னெக்கப்படுகிறது. அதன்பிரகாரம் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை என்பது மிகவும் உணர்திறன் மிக்க விடயமாகும். அதில் கர்தினால் உள்ளிட்ட பல தரப்பினர் திருப்தியடையும் வகையில் பெறுபேறுகள் கிடைத்துவருகின்றன என கூறமுடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply