தமிழ் மக்கள் கூட்டமைப்பு வழங்கிய ஆணைக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
சிங்கள மக்கள் வழங்கிய ஆணைக்கு அரசாங்கம் எவ்வளவு மதிப்பளிக்கின்றதோ அதேபோன்று தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ள ஆணையை அரசாங்கம் மதித்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்தார்கள். நடந்து முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையை நாம் மதித்துணர்ந்து அவர்களுக்கான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் குறிப்பிட்டுள்ளது போன்று சமஷ்டி அரசியல் முறையிலான தீர்வு, தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளோம். சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து ஜே.வி.பி.யும் ஆதரவு தெரிவித்துள்ளது.
எனவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக நம்பி வாக்களித்துள்ளதை அரசாங்கம் மதிக்க வேண்டும். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம். அதனை மதித்துணர்ந்து இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply