சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்த மாற்றங்களை கைவிடுமாறு கோரிக்கை
இந்தியாவில் அமலில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமாக பயன்படுத்தப்படும் இச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர நாடாளுமன்ற மக்களவை நவம்பர் 30 ஆம் தேதியே ஒப்புதல் அளித்துள்ளது.
தீவிரவாத அமைப்பு ஒன்றை தடை செய்யும் காலப் பகுதியை இரண்டு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கவும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் என்ற வரையரையை விரிவாக்கவும் இந்த சட்ட திருத்தம் வழிகோலியுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம் தொடர்பாக வரும் 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் இந்தக் கோரிக்கை வந்துள்ளது.
இந்தியாவில் தடா, பொடா போன்ற பல பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் இருந்தன. இவை தற்போது இல்லை என்றாலும், 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
‘இப்போது மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் இதலித்துகள், பழங்குடியினர் இதுபோன்ற கடுமையான சட்டங்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். நிரபராதிகள் கூட பல காலம் சிறையில் இருக்க நேர்கிறது’ என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்தார்.
‘இதுபோன்ற சட்டங்கள் அரசை விமர்சிப்போரை மௌனிக்கச் செய்யும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதேபோல பயங்கரவாத அமைப்புக்களில் நேரடியாக உறுப்பினர்களாக இல்லாதவர்களைக் கூட புதிய திருத்தங்கள் காரணமாக கைது செய்யும் வாய்ப்புள்ளது. தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இதுபோன்ற சட்டங்களால் தீவிரவாதத்தை தடுக்க முடியாது’ என்றும் மீனாக்ஷி கங்குலி வாதிடுகிறார்.
‘தீவிரவாத தாக்குதல்கள் நடந்தவுடனேயே காவல்துறை மீது சம்மந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் கைதுகளை மேற்கொள்கின்றனர். உதாரணத்திற்கு, மகாராஷ்டிராவில் நடந்த ஒரு குண்டு வெடிப்புக்குப் பின் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டனர், ஆனால் பின்னர் விசாரணையில் அந்த குண்டுவெடிப்பை செய்தது இந்துக்கள் என்று தெரியவந்தது’ என்றும் மீனாக்ஷி கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை விட கடுமையான சட்டங்கள் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அமலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply