அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் இல்லாமல் போகின்றது : திலித் ஜயவீர

அரசாங்கம் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் இப்போது பொய்யென நிரூபனமாகி வருவதால், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் இல்லாமல் போகின்றது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையில் எமது நாட்டுக்கு என்ன நடக்கின்றது. ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் நாங்கள் கலந்துரையாட வேண்டும். இந்த பிரச்சினையில் மக்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அரசாங்கத்தின் கடந்தகால செயற்பாடுகள், முன்னர் கூறியவை பொய்யாக மாறியுள்ள நிலையில் மக்கள் இந்த அரசாங்கம் இப்போது கூறுவதை நம்புவதில்லை. எரிபொருள் இருப்பதாக கூறினாலும் அரசாங்கம் கூறுவது பொய்யென மக்களே கூறுகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடு மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பாது.

அரசாங்கம் நாட்டு மக்களின் பொருளாதார பாதுகாப்புக்காக உறுதியை வழங்க வேண்டும். இதனை உலக யுத்தம் என்று கூறி தப்பிக்க முடியாது. எதனையும் முகாமைத்துவம் செய்வதே அரசாங்கமாகும். தனியார் துறையை புதன்கிழமைகளில் மூடுமாறு கூறப்படுகின்றது. அப்போது நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களின் நிலைமை என்னவாகும்.

இந்த அரசாங்கதிற்கென முறையான வெளியுறவுக் கொள்கை இல்லாமையே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனாலேயே வேறு நாடுகள் எடுக்கும் தீர்மானங்களை எங்களால் எடுக்க முடியாது உள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கம் முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply