செஞ்சிலுவைச் சங்க பணியாளர் கொலைச் சம்பவ விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் கொலைச் சம்பவ விசாரணைகளை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் குறித்த செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் தங்காலை ஹோட்டல் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். பிரித்தானிய பிரஜையான குர்ஹாம் சாக்கீ என்ற செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
உள்ளுர் அரசியல்வாதியை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு விசாரணகளை மூடிமறைக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்று ஓராண்டு காலம் கடந்துள்ள நிலையிலும் விசாரணைகள் பூர்த்தியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக இன்னமும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாகவே விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான தீர்மானத்தை பிரித்தானிய பிரதமர் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வருடாந்தம் ஆயிரக் கணக்கான பிரித்தனரிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும், குர்ஹாமிற்கு இடம்பெற்ற அனர்த்தம் வேறும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்படக் கூடுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply