மட்டக்களப்பில் இந்திய வீட்டுத் திட்ட பணிகள் இன்று ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ் கிராமமான பெரியபுல்லுமலையிலும் முஸ்லிம் கிராமமான உறுகாமத்திலும் இது தொடர்பான வைபவங்கள் நடைபெற்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வந்துள்ளது. வடக்கில் இதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றன.
இங்கு உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிழக்கு மகாணத்தில் மூவின மக்களும் வாழ்வதன் காரணமாகவே சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என மூன்று கிராமங்களில் இன்றைய ஆரம்பக் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்றார்.
இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா தனது உரையில், வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 12 500 வீடுகளில் இதுவரை 10,000 வீடுகள் பூர்த்தியடைந்துள்ளன என்றும் இந்திய அரசு வழங்க முன் வந்துள்ள வீடமைப்பு வேலைகள் அனைத்தும் 2015 ஆண்டு நிறைவு பெறும் என்றும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 1000 வீடுகளும் என 4000 வீடுகள் இந்திய உதவியுடன் அமைக்கப்படவுள்ளன.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் நஜீப் ஏ. மஜித் உட்பட மத்திய அமைச்சர் பசீர் சேகுதாவுத் துணை அமைச்சர்களான எம். எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் வினாயகமூர்த்தி முரளிதரன் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த வைபவங்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இதற்கான அழைப்பிதழ் மாவட்ட திட்டமிடல் செயலகத்தினால் இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply