அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷை கொல்ல துப்பாக்கியுடன் காரில் காத்திருந்த மர்ம நபர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகர் போலீசாருக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு அவசர அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய பெண், ‘என் வீட்டில் உள்ள குறிப்பேட்டில் எனது மகன் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளான். முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷுக்காகவும், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்காகவும் ஒரு ‘டிராகனை’ நான் வேட்டையாடப் போகிறேன். அதற்குபிறகு புஷ்ஷின் மூத்த மகள் பார்பரா எனக்கு மட்டுமே சொந்தமானவள் ஆகி விடுவாள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.அதற்கேற்ப, வீட்டில் உள்ள துப்பாக்கியையும் எடுத்து சென்றுள்ளான். எனக்கு பயமாக இருக்கிறது. எப்படியாவது அவனை தடுத்து நிறுத்துங்கள்’ என்று அந்த பெண் முறையிட்டாள். அவளது மகனின் கார் பதிவு எண், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்த போலீசார், நியூயார்க் நகரம் முழுவதும் அந்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடினர்.

இறுதியாக, மன்ஹட்டன் அருகே ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் புஷ்ஷின் வருகைக்காக காரில் மறைந்தபடி, கைத்துப்பாக்கியுடன் காத்திருந்த ஒருவனை கைது செய்தனர். அவனது காரில் இருந்து குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி, ஒரு பெரிய வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்ஷின் மூத்த மகள் பார்பராவை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், தனது காதல் ஈடேற என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தான். பெஞ்சமின் ஸ்மித் (44) என்ற அந்த நபர் மீது முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்லப் போவதாக மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவனை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

அப்போது சூழ்ந்து நின்ற நிருபர்களை பார்த்து, ‘இதற்கு (கைது) புஷ் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்று கூச்சலிட்டான். அவன் எதற்காக அப்பகுதியின் அருகே காரில் மறைந்தபடி காத்திருந்தான்?. அவன் காத்திருந்த வேளையில் புஷ்ஷும் அவரது குடும்பத்தாரும் எங்கு இருந்தனர்? உள்ளிட்ட உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

புஷ்ஷை கொல்வதன் மூலம் அவளது மகளை அடைய முடியும் என்ற விபரீத கோணம் நடந்த சம்பவத்துடன் ஒத்துப் போகவில்லை. பிடிபட்ட நபரை பார்பராவும் காதலிக்கிறாரா? என்பதையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் முடிவில் மேற்கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் தெளிவான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply