பலத்துக்கும் அதிகாரத்துக்கும் அடிபணியாமல் உண்மைக்காக போராடுகிறோம் : அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 

சர்வதேச விசாரணையொன்றை நடத்துமளவுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகள் எம்மை அரசியல் ரீதியாக பலமிழக்கச் செய்து நாட்டை நிலைகுலையச் செய்வதற்கே முயற்சிப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய அமைச்சர், நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பலம்மிக்க நாடுகளின் பலத்துக்கும் அதிகாரத்துக்கும் அடிபணியாமல் உண்மைக்கும், நியாயத்துக்குமாக போராடுகின்றோம். ஜெனீவாவில் எமது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையின் நிலைப்பாடு குறித்து தொடர்ந்தும் விளக்கமளித்து வருகிறார்.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற, நடைபெற்று வருவதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா பிரேரணையை முன்வைத்துள்ளது.

எனினும், இப்போது இந்த பிரேரணையின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல்வரை ஜெனீவாவில் இருந்தேன் அதுவரை பிரேரணையின் நகல் வரைவு தினம் தினம் திருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்தப் பிரேரணை தொடர்பாக தொடர்ந்தும் பேசுகிறார்கள், சில ஆபிரிக்க நாடுகள் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கேட்கின்றன. அப்போதுதான் ஆதரவளிக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. இதனால் தினம் தினம் மாற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டே உள்ளன.

எனினும், இலங்கையின் நிலைப்பாட்டை திருத்த வேண்டும் என்றோ, மாற்ற வேண்டும் என்றோ எவரும் கோரவில்லை எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு எமது எதிர்ப்பை பலமாக தெரிவித்திருக்கிறோம். சர்வதேச விசாரணையொன்றை நடத்துமளவுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்பதை வலியுறுத்தியிருக்கின்றோம்.

இந்த பிரேரணைக்கு வாக்களிக்கவுள்ள நாடுகளின் தூதுவர்களுக்கு, பிரதிநிதிகளுக்கு, வெளிவிவகார அமைச்சர்களுக்கு இலங்கை தமது நிலைப்பாட்டை விளக்கிக் கூறியுள்ளது. இது இலங்கையின் பொறுப்பாகும். ஜெனீவா சென்றுள்ள எமது அமைச்சர்கள் அனைவரும் இதனை மேற்கொண்டோம்.

புலம்பெயர் அமைப்புகள் மட்டுமல்ல இங்கிருந்தும் சிலர் ஜெனீவா சென்று இலங்கைக்கு எதிராகக் கூறும் விடயங்கள் குறித்தும் நாம் உலக நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளோம். அவர்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறோம். இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து இலங்கையர்கள் சுமார் 5000 பேரளவில் ஜெனீவாவில் ஒன்று கூடவுள்ளனர்.

இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப் படவுள்ள இந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அவர்கள் திரளவுள்ளார்கள்.

முதல் முறையாக தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் கருத்துக்களை மட்டுமல்ல எமது கூற்றுக்களையும் கேளுங்கள் வெளிநாட்டில் வாழும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் கேட்கிறார்கள்.

இந்தப் பிரேரணையை பொறுத்த வரையில் நாம் சிறியதொரு வெற்றியைக் பெற்றுக்கொண்டுள்ளோம். அதாவது தற்போதுள்ள பிரேரணை வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக்குழு வேண்டும் என்ற விடயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவால் எல்லா நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது.

தனது முழு பலத்தையும் பிரயோகித்து அரச தூதர்களுக்கு தொலைபேசிமூலம் அழைத்து இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்கமுடியாது. எனினும், இந்த மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் சர்வதேச விசாரணைக்கு அடித்தளமிடும் வகையில் இலங்கை மேற்கொள்ளும் விசாரணைகளை கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையொன்று அவசியம் என்பதையும் திருத்தத்தில் சேர்த்துள்ளார்கள்.

அமெரிக்காவின் தூதுவரும், பிரிட்டன் தூதுவரும் தன்னை வாக்களிக்குமாறு வற்புறுத்தியதாக மற்றுமொரு நாட்டுத் தூதுவர் என்னிடம் தெரிவித்தார்.

சிறிய மீனொன்று திமிங்கிலத்துடன் போட்டிபோடுவது போன்று எமது நிலை உள்ளது. உலகில் பலம்வாய்ந்த சக்தி மிக்க அரசியல் தொடர்புகள் இருக்கின்ற, பொருளாதார தொடர்புகள் உள்ள நாடான அமெரிக்காவுடன் தான் எமது சிறிய நாடு மோதுகிறது. இதுவும் எங்களுக்கு ஒரு பெருமைதான்.

நாங்கள் அவர்களது பலத்துக்கும் அதிகாரத்துக்கும் அடிபணியாமல் உண்மைக்கும், நியாயத்துக்குமாக போராடுகின்றோம்.

பிரபாகரன் இறந்தது அவர்களுக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழித்தது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்த வருத்தத்தின், வேதனையின் வெளிப்பாடுதான் எமக்கு எதிரான சர்வதேச விசாரணை என்கின்ற பிரேரணை என்பது எமக்குத் தெளிவாக புலப்படுகிறது.

எமது நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றம், இன நல்லிணக்கத்துக்காக முன்னெடுத்திருக்கின்ற வேலைத்திட்டங்கள் போன்ற அனைத்தையும் மறந்துவிட்ட நிலையில் சர்வதேச விசாரணையென்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் தான் இதற்கு முதன்மை வகித்துள்ளன. முழுக்க முழுக்க இலங்கை மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியே காரணம். இலங்கை மீது அன்பு கொண்டோ, இலங்கை மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவோ செய்யப்பட்ட தல்ல. இந்த விடயம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை நடுநிலையாகவோ, சுயாதீனமாகவோ அமையப்போவதுமி ல்லை. முழுக்க முழுக்க அரசியல் செயற்பாடு கொண்டதாவே ஆகிவிட்டது.

அரசியல் ரீதியாக எங்களைத் தாக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன் மனித உரிமைகள் பேரவை எமக்கு எதிராகத்தான் செயற்படுகிறது. நாம் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் அந்த நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக அவர்களது செயல் பிழையானது என்று தெரிந்தாலும் சிலர் அவர்களுடன் இருப்பது போன்று தெரிகிறது. சில நாடுகள் தங்களது இறுதி முடிவை பகிரங்கமாகத் தெரிவிக்க மாட்டார்கள். இலங்கை முடிந்தளவு தனது நிலைப் பாட்டை விளக்கித் தெளிவுபடுத்தியுள்ளது. இறுதி நேரம் வரை காத்திருக்கிறோம்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், நானும் பலருக்கு விளக்கமளித்திருக்கி றோம். இறுதி வாக்களிப்பின்போது அவர்களுக்குத் தேவையான பெரும்பான்மை இருக்குமானால் இறுதி நேரத்தில் கூட பிரேரணையில் திருத்தங்கள் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது. தீர்மானத்தை நிறைவேற்றவும் முடியும். இலங்கையும் இறுதிநேரம் வரை முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply