தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை சர்தேச நாடுகளின் நலன்சார்ந்ததாக உள்ளது : சுரேஷ்
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை இன்று அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட சர்தேச நாடுகளின் நலன்களுக்கான பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக, இம்மக்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு சுயநிர்ணயத்துடன் நிம்மதியாக தமிழ் மக்கள் வாழ்வதை உறுதிசெய்ய வேண்டும் என்பதாதேயாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேசப் பணிமனை நேற்று நீர்வேலியில் பருத்தித்துறை வீதிக்கருகில் திறந்துவைக்கப்பட்டபோது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையானது சர்வதேச விவகாரம் என்று வரும்போது அது உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினையாக அமையாது. இன்று தமிழ் மக்களின் பிரச்சினை தமிழ் மக்களுக்கான பிரச்சினையாக பார்க்கப்படாது இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நலன்கள் சார்ந்ததாகவே பார்க்கப்படுகின்றது.
இப் பிரச்சினையில் இலங்கையின் நலன்களும் அதிகளவில் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சினையானது இன்று பல்வேறு தரப்பினருடைய நலன்கள் சார்ந்ததாக பல்வேறுபட்ட பிரச்சினைகளை உள்ளடக்கியதாக மாற்றமடைந்துள்ளது. ஆகவே இப்பிரச்சினைக்கு வெவ்வேறு தரப்புக்களினால் வெவ்வெறு வகையான பொருள்கோடல்கள் கூறப்படுகின்றன.
அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில் இப்பிரச்சினைக்கு வெவ்வேறு வகையான விளக்கங்களும் வெவ்வேறு வகையான பொருள்கோடல்களும் கொடுக்கப்பட்டு இப்பிரச்சினை வெவ்வேறு வகையாகக் கையாளப்படுக்கூடும். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் வடகிழக்கு இணைந்த பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் நிம்மதியாக வாழக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும் என்பதாகவுள்ளது. இதனை ஏற்படுத்துவதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் இதனை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் சிந்தித்து வருகின்றோம்.
இதற்காக எங்களுடைய மக்களின் நலன்களுக்கு ஏற்றவகையில் சர்வதேச சமூகத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் அவ்வாறு சர்வதேச சமூகத்தின் உதவிகளை பெற்றுக்கொள்கின்ற போது அவர்கள் தெரிவிக்கின்ற அல்லது அவர்களால் முன்வைக்கப்படுகின்ற சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் விடுவது மற்றும் சர்வதேச சமூகத்தை எதிர்க்காமல் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுற்படுவது போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்றோம்.
இதுவே இன்றைய சூழலில் முக்கியமான விடயமாகக் காணப்படுகின்றது. இதனை ஒருவராலோ இருவராலோ சுயமாகச் சிந்தித்து செய்துவிட முடியாது. இதனை செய்து முடிப்பதற்கு கூட்டுப்பொறுப்பும், கூட்டுச் சிந்தனையும் எமக்கிடையில் இருக்கவேண்டும்.
இதற்காக பல்வேறு பட்ட நிபுணர்களிடமிருந்து செய்திகளையும் விடயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுச் செயற்படவேண்டும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தனிநபர்கள் அல்லது ஒருசிலர் எடுத்திருக்கின்ற முடிவுகள் சில சமயங்களில் தோற்றுப்போயுள்ளன. ஆனால் சில சமயங்களில் வெற்றிகளும் கிடைத்திருக்கின்றன.
இந்த வகையில் கூட்டுப்பொறுப்பு, கூட்டுக் கருத்துப் பரிமாற்றம் என்பதே முக்கியமான விடயமாக அமைகின்றது. இதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த முயற்சியில் எமக்கு வெற்றிகளும் தோல்விகளும் கிடைக்கலாம். ஆனால் வெற்றி கிடைக்கின்ற போது ஒருவர் தலையிலும் தோல்வியடைகின்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் போடுவது அழகான செயலாக அமையாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கூட்டாக இயங்குவதற்கான சூழல்களையும் நிலைமைகளையும் உருவாக்கவேண்டும் என்பதே இங்கு முக்கியமான விடயமாகக் காணப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக பெரும்பாலனவர்களால் கணிக்கப்படுகின்றது. இது பாராளுமன்றத் தேர்தலாகவோ ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம். இவ்விடயங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் பேசப்படுகின்றது. தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இவ்விடயம் தொடர்பாக ஆங்காங்கே பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறு பேசுகின்றவர்கள் அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் இங்கு ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படவேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
இந்த வகையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம். ஆனால் தனிநபர் ஒருவர் பொது ஜனாதிபதியாக வந்தால் அல்லது சரியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இங்கு ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும் என்பது சர்வதேச சமூகத்திற்கு தேவையாக இருக்கலாம். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply