பேச்சுவார்த்தைக்காக எந்த நிபந்தனைகளையும் ஏற்க மாட்டோம்: அருண்ஜெட்லிக்கு பாகிஸ்தான் பதில்

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து இந்திய ராணுவ மந்திரி அருண் ஜெட்லி கூறும்போது, ‘‘பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா? அல்லது இந்திய பிரிவினைவாதிகளுடன் பேச விரும்புகிறதா? என்ற தெளிவான முடிவுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் கூறியதாவது:-பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பேச்சுவார்த்தை ஒரு நாட்டுக்கு சாதகமாக மற்றொரு நாடு செயல்பட வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தான் பாகிஸ்தான், இந்தியா இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் அவசியம். அதனால் தான் தெற்கு ஆசியாவும் பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள் நலனை கவனத்தில் கொண்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக நாங்கள் எந்த நிபந்தனைகளையும் ஏற்க மாட்டோம். காஷ்மீர் மக்கள் இந்திய பிரிவினைவாதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காக போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள். மக்கள் தங்கள் சுயமான முடிவுகளை எடுப்பது என்பது ஐ.நா. தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் பாகிஸ்தான் ஒருதரப்புவாதி. எனவே இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே பாகிஸ்தான் வழியாக நடைபெறும் எந்த வர்த்தகத்துக்கும் பாகிஸ்தான் தடை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு வழிகொடுக்க நாங்கள் தயார். கராச்சி துறைமுகத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாகா எல்லையில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து இந்திய பிரதமர் கொடுத்துள்ள அறிக்கையை பார்த்தோம். எங்களது அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் தீவிர விசாரணை நடைபெற இதில் வெளிநாட்டு உதவி தேவையா? இல்லையா? என்பதை முடிவு செய்வோம். (அமெரிக்காவும் விசாரணைக்கு உதவ தயார் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது)

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply