சர்வதேச தரத்துக்கு நிகரானதாகவே உள்ளக விசாரணைகள் அமைய வேண்டும் : செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் 

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணையின் நம்பகத்தன்மையா னது சர்வதேச தரத்திலான பொறிமுறைக்குட்பட்டதாக அமையுமென்பதே ஐக்கிய நாடுகள் சபையினதும் சர்வதேச சமூகத்தினரதும் எதிர்பார்ப்பாகுமென இலங்கை வந்துள்ள ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை அரசாங்கம் நீண்டகால இழுபறிக்குள்ளாகியிருக்கும் காணி, தடுத்து வைத்தல், காணாமற்போதல் மற்றும் பொதுமக்கள் வாழ் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் ஆகிய பிரச்சினைகளுக்கு மிக குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சிவிலியன்கள் வாழும் இடங்களில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் அழுத்தம் வழங்கினார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரை சந்தித்து பல விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இவர் கேள்விகளுக்கு பதிலளிக்குகையிலேயே மேற்கண்ட தனது கருத்தினைக் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையானது தனது உறுப்பு நாடுகளால் முன்னெடுக்கப்படும் சர்வதேச தரத்தினாலான உள்ளக விசாரணைக்கு நிச்சயமாக ஆதரவு வழங்கும். எனவே, அந்த வகையில், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையும் சர்வதேச தரம், சர்வதேசத்திலுள்ள வழக்கங்கள், மனித உரிமை சாசனங்கள், ஐ.நா.வின் ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றியதொரு பொறிமுறையாக அமையும் பட்சத்தில் அதனை நம்பகத்தன்மையுடையதாக ஏற்றுக்கொள்ளும். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களும் இதனை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளலாமெனவும் அவர் கூறினார்.

புதிய அரசாங்கத்திற்கு நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவையென்பதனாலேயே இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஏற்று இலங்கை தொடர்பில் முன்வைக்கவிருந்த அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. எதிர்பார்ப்பு கூடிய இந்த விடயம் எத்தனை சிக்கலானது என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியும். அரசாங்கம் தான் விரும்பிய கால எல்லையை வரையறையாக கொண்டு செயற்பட முடியும்.

எனினும், இப்போது முதல் செப்டெம்பர் மாத அமர்வு வரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்கம் வெளிப்படையாக எத்தகைய பொறிமுறையை கையாண்டுள்ளது என்பதனை அவர்கள் எதிர்வரும் அமர்வில் வெளிப்படுத்தும் விதம் அரசாங்கத்தின் ஆர்வம் மற்றும் முயற்சியை எமக்கு தெரியப்படுத்துமென நம்புகின்றோமெனவும் அவர் கூறினார்.

குறுகிய காலமென்னும் போது, செப்டெம்பர் மாதத்திற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இருக்க வேண்டும். இதுவே, புதிய அரசாங்கம் தமது செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு வழங்கிய செய்தியாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply