அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடத்த பாராளுமன்றம் உகந்த இடமல்ல
அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பாராளுமன்றம் உகந்த இடமல்ல. கழிப்பறையில் செய்ய வேண்டியதை சாப்பாட்டறையில் செய்வது பிழையான விடயம் என சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் சுட்டிக்காட்டினார். காணாமற் போனவர்கள் பற்றிய அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிரணி எம்.பிக்கள் சபை யில் நடந்து கொண்டமை தொடர்பில் கருத்துக் கூறும்போதே சபாநாயகர் இதனைக் கூறினார். குறித்த சட்டமூலம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லையென எதிரணியினர் நேற்றும் சர்ச்சையை ஏற்படுத்தினர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்ட முறை குறித்து வெட்கமடைவதுடன், இது தொடர்பில் இரு தரப்பினரும் வெட்கமடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அரசியலில் புரட்சிகரமாக நடந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்கு லிப்டன் சுற்றுவட்டம், புறக்கோட்டை ரயில் நிலையம், மருதானை புகையிரதநிலையம், ஹைட்பார்க் என பல இடங்கள் உள்ளன. ஆனால் பாராளுமன்றத்தில் அவ்வாறு செய்ய முடியாது. கழிப்பறையில் செய்ய வேண்டியதை சாப்பட்டறையில் செய்வது பிழையான விடயம் என்றார்.
‘கௌரவ உறுப்பினர்கள்’ என விளிக்கப்படுவதற்கமைய அதற்கான கௌரவத்துடன் உறுப்பினர்கள் நடக்க முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த சட்டமூலம் மே மாதம் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கு எதிராக கருத்துக்களையும், யோசனைகளையும் முன்வைப்பதற்கு போதுமானளவு காலம் இருந்தது. சபையில் முன்வைக்கப்பட்ட பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடியிருந்தோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால் இதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. இவ்வாரத்துக்குள் முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இதற்கமைய எதிர்க்கட்சியினருக்கும் பேசுவதற்கு கூடுதல் நேரம் பெற்றுக் கொடுக்குமாறு பிரதமரிடமும், சபைமுதல்வரிடமும் கேட்டிருந்தேன். இதற்கமைய கடந்த வியாழக்கிழமை அவர்களுக்கு மேலதிகமாக 2 மணித்தியாலங்கள் வழங்குவதற்கு இணங்கப்பட்டது.
அத்துடன் கடந்த சில மாதங்களாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதன்சார்பில் தினேஷ் குணவர்த்தனவை கலந்துரையாடல்களுக்கு அழைத்து அவருடைய கருத்துக்களையும் செவிமடுத்திருந்தோம். அதேபோல, தகவலறியும் சட்டமூலத்தின் போது அவருடைய திருத்தங்களை தயாரிப்பதற்கு பல நாட்கள் சென்றது. சபாநாயகர் என்ற ரீதியில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சமமானளவு நேரத்தை வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
தகவலறியும் சட்டமூலத்தை நான் முன்வைக்க முயற்சித்தபோது ஆசனத்திலிருந்து எழும்புவதற்குக் கூட அப்போது சபைமுதல்வராக இருந்த தினேஷ் குணவர்த்தன எனக்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறான தடைகளுக்கு நாம் முகங்கொடுத்தவர்கள் என்பதாலேயே எதிரணியில் உள்ளவர்களின் குரல்களை செவிமடுக்கின்றோம். கடந்த நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு நேரம் ஒதுக்கும் விடயத்தில் 50 வீதநேரம் ஒதுக்குவதற்கு இணங்கப்பட்டது. காணாமல்போனவர்கள் குறித்த அலுவலக சட்டமூலத்தில் 50 வீதத்துக்கும் அதிகமான நேரம் ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் 177 உறுப்பினர்களைவிட 51 பேருக்கு அதிகமான நேரம் ஒதுக்கப்படுகிறது. ஜனநாயக ரீதியில் பார்ப்பதாயின் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களுக்கு அதிகநேரம் வழங்கவேண்டும். எனினும் நாம் அவ்வாறு செய்யாது நியாயமான முறையில் நேரத்தை ஒதுக்குகின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply