கொலைகளை கண்டித்து ஒன்று திரண்டது மாணவர் சமூகம்

coljaff160406729_4891938_24102016_mff_cmy1யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், நீதி வேண்டியும் யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்கு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சகல பல்கலைக்கழகங்களிலும் பட்டதாரி மாணவர்கள் அஹிம்சை வழியான போராட்டங்களை நேற்று (24) முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கச்சேரிக்கு முன்னால் அமைதியான முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏ௯ வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

 

யாழ் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த சுமார் 2500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை 7 மணிமுதல் நான்கு மணித்தியாலங்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வீதியில் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்த அவர்கள் முற்பகல் 10 மணியளவில் ஏ௯ வீதியை வழிமறித்து வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தற்காலிகமாகத் தடைப்பட்டது.

 

அமைதிவழியான முற்றுகைப் போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் என இனவேறுபாடின்றி சகல மாணவர்களும் கலந்துகொண்டனர்.

 

படுகொலையோடு தொடர்புடைய கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இவர்கள் வலியுறுத்தியதுடன், படுகொலை என்பது தமிழனுக்கு விதிக்கப்பட்ட விதியா? திட்டமிட்ட இன அழிப்பை நிறுத்தி, மனித உரிமைகள் மாணவர்களுக்கு இல்லையா? இதுவா நல்லாட்சி? பக்கச்சார்பற்ற நீதி வேண்டும், தமிழருக்கு சட்டம் என்பது இருட்டறையா? ஐவரின் கைது வேட்டை நாடகமா? என பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய பதாதைகளை எந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்புமாறு கோரி பட்டதாரி மாணவர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகத்திடம் மகஜரொன்றையும் கையளித்திருந்தனர். இத்துடன் வடமாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஊடாகவும் ஜனாதிபதிக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. அமைதிவழியாக முன்னெடுத்த போராட்டத்தை முடித்துக் கொண்டு உயிரிழந்த பட்டதாரி மாணவரான சுலக்‌ஷனின் இறுதிக் கிரியைகளிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

சக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரி நடத்தப்படும் ஹர்த்தாலுக்கு பட்டதாரி மாணவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நேற்றைய போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன், நீதி கிடைக்கும்வரை கல்விச் செயற்பாடுகள் பல்கலைக்கழகத்தில் இடம்பெறாது என்றும் மாணவர் சங்கம் அறிவித்தது.

 

கிழக்கில்

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாத்திரமன்றி கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களும் நீதிவேண்டி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். தலைகளில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறு, கண்டன பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

 

மலையகத்தில்

 

அத்துடன் பேராதனைப் பல்லைக்கழக மாணவர்களும் நேற்றையதினம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சியில்

 

பல்கலைக்கழகங்களில் பட்டதாரி மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால் கிளிநொச்சியில் பொது அமைப்புக்கள், பாடாசாலை மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட கண்டனப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் வர்த்தக சமுகத்தினரின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் ஆரம்பமான கண்டனப் பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முடிவடைந்தது. மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

 

கொழும்பில்

 

சிவில் அமைப்புக்கள், இடதுசாரி அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் இணைந்து நேற்று மாலை புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். வடக்கிலுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அச்ச சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், நல்லாட்சியில் எதிர்பார்த்த மாற்றம் இதுவா என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

 

ஹர்த்தாலுக்கு அழைப்பு

 

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று (25) வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கான அழைப்பை ஆறு அரசியல் கட்சிகள் கூட்டாக விடுத்திருந்தன. இதற்கமைய இன்று(25) வடமாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply