சமாதானத்துக்கு ஆபத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரிடையேயும் இனங்களுக்கிடையேயும், நீடிக்கும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படுமெனக் காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, ஆபத்தில் காணப்படுவதாக, சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது.   சர்வதேச ரீதியில் முரண்பாடுகளைத் தடுப்பது தொடர்பாக இயங்கும் இந்த அரசசார்பற்ற அமைப்பு, 1995ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் இயங்கி வருகிறது.   இந்நிலையில், இலங்கையின் நிலைமை தொடர்பாக, 34 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, இக்குழு வெளியிட்டுள்ளது. 

 

தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அடைவுகள் பெறப்பட்ட போதிலும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்கள், மெதுவடைந்துள்ளன அல்லது தலைகீழாக மாறியுள்ளன என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், இலங்கையின் நிலைமை தொடர்பாக, 34 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, இக்குழு வெளியிட்டுள்ளது.   தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அடைவுகள் பெறப்பட்ட போதிலும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்கள், மெதுவடைந்துள்ளன அல்லது தலைகீழாக மாறியுள்ளன என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தேசிய அரசாங்கத்துக்குள் பிளவுகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன எனத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை, பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ, உள்ளடக்கமான சமூகத்தை உருவாக்கவோ அல்லது தேசிய பாதுகாப்பு நிலைமையைச் சீர்படுத்தவோ, குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, இந்த அரசாங்கம், குறுகியகால கட்சி, தனிநபர் அரசியல் கணிப்புகளை விடுத்து, சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அரசியலில் இறங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   பொருளாதாரத்தை உயர்த்துதல், ஊழலை இல்லாது செய்தல், சட்டத்தின் ஆட்சியை மீளக் கொண்டு வருதல், போரின் பிரச்சினைகளைத் தீர்த்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் ஆகியன, பரந்தளவில் அடையப்படாதவையாகவே உள்ளன என்று தெரிவிக்கும் இக்குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், அரசியல் கொலைகள், இந்த அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் ஆகியன தொடர்பில், போதுமான வழக்குத் தொடுப்புகள் இடம்பெறாத நிலையில், சீர்திருத்தத்துக்கான அரசாங்கத்தின் விருப்பம் தொடர்பான நம்பிக்கை, குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கைக்குள் வைத்திருத்தல் தொடர்பாக, ராஜபக்‌ஷவுடன் போட்டியிட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கும் இக்குழு, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்தத் தேசிய அரசாங்கம் தொடர்பில், விருப்பத்துடன் இருக்கவில்லை என்று தெரிவிக்கிறது. மறுபக்கமாக, ஐ.தே.கவின் செருக்குத் தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், ஆலோசனைகளை ஏற்காத பண்பு காரணமாகவும், இந்த அமைச்சர்கள், இவ்வாறு காணப்படுகின்றனர் எனவும் கூறுகிறது.   ராஜபக்‌ஷவின் தேசியவாதத்தால் அச்சமடைந்துள்ள ஜனாதிபதி சிறிசேன, முக்கியமான அரச, நல்லிணக்க வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில், தயக்கம் காட்டுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது, அவரைப் பதவிக்குக் கொண்டுவந்த மக்களின் ஆதரவை இழக்கச் செய்கிறது எனவும் கூறப்படுகிறது.   தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதான சித்திரவதைகள், வழக்கமாக இடம்பெறும் நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன எனத் தெரிவிக்கும் இந்த அறிக்கை, ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும், இன்னமும் பிரதியீடு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கிறது.   வடக்கிலும் கிழக்கிலும், பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், தமிழ், முஸ்லிம் சமூகங்களில், புத்தரின் சிலைகள் வைக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, இராணுவத்தின் நடவடிக்கைகளைக் குறைக்காமை காரணமாக, வடக்கில் வாழும் தமிழ் மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாகவும், இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவைப் பலவீனமாக்கிவருகிறது எனவும் தெரிவிக்கிறது.

பரிந்துரைகள்…

அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச நெருக்கடிக் குழு, ஜனநாயகச் சீர்திருத்தங்களின் இயக்கத்தை மீளக் கொண்டுவருவதற்காக, பரிந்துரைகள் பலவற்றையும் முன்வைத்துள்ளது.   அவற்றில் முக்கியமான சில பரிந்துரைகள் இவை:   புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குக. இதில் அனைத்துப் பிரஜைகளதும் சமூகங்களதும் உரிமைகள், சமமாக மதிக்கப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பில் இது வெற்றிபெறுவதற்கான பிரசாரம், ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.  இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகள் விடுவிக்கப்படுவதைத் துரிதமாக்குவதோடு, அவற்றை மேலும் வெளிப்படையாக்குக.   உள்ளூர் வணிகங்களைப் பாதிக்கும் வகையில், விவசாயம், பண்ணை, கடைகள் போன்றவற்றில் இராணுவச் செயற்பாட்டை நிறுத்துக.     தமிழ், முஸ்லிம் இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிப்பதில், இராணுவப் பங்கெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருக.   சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகளை அச்சுறுத்தும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துக.   சுயாதீனமான, அனுபவம் வாய்ந்த ஊழியர்களோடு, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு முக்கியமான பங்கை வழங்கும் வகையில், காணாமல் போனோருக்கான அலுவலகத்தை, உடனடியாக அமைக்குக.   நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அங்கிகரித்து, அதன் பரிந்துரைகளைப் பயன்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான திட்டத்தை விருத்தி செய்க.   பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாது செய்து, பரவலாகக் காணப்படும் சட்டவிலக்களிப்பை நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துக.   பெப்ரவரி 2015இல் நடைபெற்ற திணைசேரி பிணைமுறி, ஊடகவியலாளர்களையும் மாணவர்களையும் கொன்ற தொடர்ச்சியான பல சம்பவங்களின் இராணுவப் புலனாய்வாளர்களின் பங்களிப்பு என்ற குற்றச்சாட்டு, மூதூர் உதவிப் பணியாளர்களின் படுகொலை, திருணோமலை மாணவர்களின் படுகொலை ஆகியவற்றை விசாரிக்குக.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply