மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 149-ஆக உயர்வு

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.மெக்சிகோ நேரப்படி மதிய உணவு இடைவேளையின்போது பூமி அதிர்ந்தது. இதனால் தலைநகரம் மெக்சிகோ சிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பீதி அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அலறியடித்தபடி வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.

பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். பூகம்பத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டு போன்று ‘மடமட’வென சரிந்தன.

இதனால் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். தங்களை காப்பாற்றும்படி அபய குரல்கள் எழுப்பினர். பூகம்பத்தை தொடர்ந்து மீட்பு படையினர் களம் இறங்கியுள்ளனர். கட்டிட இடிபாடுகளை உடைத்து அதில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவர்களின் உறவினர்களும் ஈடுபட்டனர். தங்களது கைகளால் இடிபாடுகளை தோண்டி அகற்றினர். பூகம்ப பகுதிக்கு ஏராளமான ஆம்புலன்சுகள் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

 

100-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பூகம்பத்தில் 149 பேர் பலியாகி உள்ளனர். மோர்லோஸ் மாகாணத்தில் அதிக பேர் பலியாகியுள்ளனர். அங்கு மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மெக்சிகோசிட்டியில் 36 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மத்திய மாகாணமான பியூப்லாவில் 29 பேர்களும், தென்மேற்கு மெக்சிகோவில் உள்ள குயரோ மாகாணத்தில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.

பூகம்ப பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. 38 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர். பெரிய அளவில் ‘கியாஸ்’ கசிவு ஏற்பட்டது. இதனால் தீ விபத்துகளும் ஏற்பட்டன. அவற்றை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது. பியூப்லா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் பூகம்பம் உருவாகியுள்ளது.

பூகம்பத்தில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. அங்கு 44 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி மண்ணோடு மண் ஆனது.

அதில் பள்ளிக்கூடம், தொழிற்சாலை, சூப்பர் மார்க்கெட் போன்றவையும் அடங்கும். கலைநயம் மிக்க ரோமா மாவட்டத்தில் 6 மாடி கட்டிடம் உள்பட பல கட்டிடங்கள் தரைமட்டமாயின.

மெக்சிகோவில் உள்ள போபோகேட் பெட் என்ற எரிமலை சிறிய அளவில் வெடித்தது. அதன் அடிவாரத்தில் உள்ள அட்ஷிட்ஷி கானில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் இடிந்தது. அப்போது அங்கு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் அங்கு இடிபாடுகளில் சிக்கிய 15 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘மெக்சிகோசிட்டி மக்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்’ என கூறியுள்ளார்.

மெக்சிகோவில் கடந்த 1985-ம் ஆண்டு அதாவது 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மெக்சிகோசிட்டியில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

சமீபத்தில் கடந்த 7-ந்தேதி தெற்கு மெக்சிகோவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 98 பேர் உயிரிழந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply