சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

சிரியாவில் 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.

தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படைகள் ஒரு வார காலம் நடத்திய கடும் தாக்குதலில் 500–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இது உலக அரங்கை அதிர வைப்பதாக அமைந்தது.

கொல்லப்பட்டவர்களில் 127 பேர் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிக் குழந்தைகள் என்பது கொடூரத்தின் உச்சம் ஆகும். நேற்று முன்தினம் நடந்த ஒரு நாள் தாக்குதலில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியாகினர்.

இப்படி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு உலகத்தலைவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

சிரியாவில் ஒரு பக்கம்  உணவுப்பொருட்களோ, நிவாரணப்பொருட்களே இன்றி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். இன்னொரு புறம் போரினால் படுகாயம் அடைந்து ஏராளமான மக்கள் சிகிச்சை பெற வழியின்றி தத்தளிக்கின்றனர்.

கிழக்கு கூட்டா பூமியின் நரகம் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வர்ணிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

இந்த நிலையில்தான் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷிய நாட்டின் ஆதரவுடன் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு நேற்று முன்தினம் ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த போர் நிறுத்தம், அங்கு உணவுப்பொருட்களும், நிவாரணப்பொருட்களும் சென்று அடைவதற்கு வழி வகுக்கும். அது மட்டுமின்றி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் வெளியேற உதவியாக அமையும்.

ஆனால் போர் நிறுத்தம்  எப்போது அமலுக்கு வரும் என கூறப்படவில்லை. இருப்பினும் தாமதம் இன்றி செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

போர் நிறுத்த தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், கிழக்கு கூட்டாவில் ரஷியா ஆதரவுடன் சிரியா அதிபர் ஆதரவு படைகள் வான்தாக்குதல் நடத்தி உள்ளன.

சிரியாவில் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் கடந்த வியாழக்கிழமையன்று ஓட்டெடுப்புக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷியா வீட்டோ உரிமையை (மறுப்பு ஓட்டு) பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தைகள் நீண்டன.

இதுபற்றி ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கூறுகையில், ‘‘ரஷியாவுக்காக காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும், மனித துன்பங்கள் பெருகின’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘அவர்கள் (ரஷியா) பேச்சுவார்த்தையை இழுத்துக்கொண்டே சென்றபோது, அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் வான்தாக்குதலில் ஈடுபட்டபடியே இருந்தன. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற நமக்கு 3 நாட்கள் பிடித்து உள்ளது. இந்த நாட்களில் மட்டும் எத்தனை தாய்மார் குண்டுவீச்சில் தங்கள் குழந்தைகளை இழந்து உள்ளனர்?’’ என வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.

ஆனால் அவரது குற்றச்சாட்டை ரஷிய தூதர் வாசிலி நெபன்சியா நிராகரித்தார்.

இப்போது போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்து விட்டபோதிலும், அது சிரியாவில் எந்த அளவுக்கு பலன்களைத் தரும் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஏனென்றால் இந்த போர் நிறுத்தம், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை கட்டுப்படுத்தாது.

எனவே ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும், அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கும் எதிரான தாக்குதல்களை அதிபர் ஆதரவு படைகள் தொடரும்.

குறிப்பாக இத்லிப் மாகாணத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய போராளிகள் மீது அதிபர் ஆதரவு படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும்.

போர்நிறுத்தம் பற்றி பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் டெலாட்ரே கருத்து தெரிவிக்கையில், ‘‘போர் நிறுத்தம், களத்தில் உண்மையாகவே அமல்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியம்’’ என்று குறிப்பிட்டார்.

கிழக்கு கூட்டாவில் உள்ள இரு பெரும் கிளர்ச்சியாளர் குழுக்கள் போர் நிறுத்தத்தை வரவேற்று உள்ளன.

ஜெய்ஷ் அல் இஸ்லாம், பைலாக் அல் ரகுமான் கிளர்ச்சியாளர் குழுக்கள் தனித்தனியே விடுத்துள்ள அறிக்கைகளில், நிவாரணப்பொருட்கள் வரும் வாகனங்கள், கிழக்கு கூட்டாவினுள் வருவதற்கு பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்து உள்ளனர். மேலும், போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்போம் எனவும் கூறி இருக்கின்றனர். அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகள் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடுத்தால், பதிலடி கொடுப்போம் எனவும் தெரிவித்து உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply