கதாநாயகனாக விளங்கியவர் வில்லனாக சித்தரிக்கப்படுகிறார் : ரஜினி மீது தி.மு.க. பாய்ச்சல்

தி.மு.க. நாளேடான முரசொலியில் வெளியாகி உள்ள கட்டுரையில் ரஜினி பேட்டி குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்கும் முன் ரஜினிகாந்த் – ஆழம் பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார்.

அவரது தூத்துக்குடி விஜயம்- அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி- பின்னர் விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலே அவர் ஆத்திரத்தில் வெடித்தது, இவை எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது.

ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது ‘ஆன்மிகம்‘ கேள்விக்குறியாகி விட்டது. யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றி பெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம்.

ஆனால் அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்த கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு கருத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதையும், அனைத்துக்கும் போராட்டங்கள் கூடாது என்று தூத்துக்குடியில் பேசும் அவர், வர இருக்கும் தனது படத்தில் அனைத்துக்கும் போராடுவோம் என்கிறார்.
இவையெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதும், செயல்படுவதும்தான் ஆன்மிக அரசியலா என்பதை ரஜினி தான் தெளிவாக்க வேண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன் நிலை மறந்து பதட்டத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பலத்த எதிர்ப்பு பல திக்குகளிலிருந்து கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்த ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி”- என்று திரைப்படங்களில் ‘பஞ்ச்‘ டயலாக் பேசிய ரஜினிதான், சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

தவறாக தன் நிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு வெடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததை வரவேற்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில் வி‌ஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்ததாகக் கூறிய கருத்து ஏற்கத்தக்கதா? அந்தப் போராட்டத்தில் புகுந்த ‘வி‌ஷக்கிருமிகள், சமூக விரோதிகளை’த் தனக்குத் தெரியும் என்று தெரிவித்த ரஜினி, அதனை வெளிப்படுத்த தயங்குவதேன்?

தனக்குத் தெரிந்த விவகாரத்தையும் தெரிவிக்கத் தவிர்ப்பதுதான் ஆன்மீக அரசியலா? ரஜினி விளக்குவார் என எதிர்பார்க்கலாமா?

“எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகி விடும்” எனக் கருத்து கூறியுள்ளார் ரஜினி. அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வர இருக்கும் தனது திரைப்படமான ‘காலா’ வில் ‘அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்…

எனப்பாடி நடித்துவிட்டு- நிழலில் ஒன்று, நிஜத்தில் வேறு ஒன்றுஎனச் செயல்படுவதுதான் ஆன்மிக அரசியலா? ரஜினி தெளிவாக்க வேண்டும். அல்லது தெளிவாக வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லப் புறப்பட்டவர், அங்கே சென்றவுடன், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுக்கு எதிராகப் பேட்டி அளிக்கிறார்.

மத்திய-மாநில அரசுகளின் பிரதிநிதிபோல தன்னைப் பிரதிபலித்துக் கொள்கிறார். துப்பாக்கி சூடு நடைபெற்று பல நாட்களுக்குப் பின் திடீரென விழித்து அங்கே செல்கிறார்- சென்று, துப்பாக்கி சூட்டுக்கு நியாயம் கற்பிக்கிறார்.

போராட்டத்துக்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே, அவர் யாராலோ ஏவப்பட்ட அம்பாகச் செயல்படுகிறார் என்பதைத் தெளிவாக்கவில்லையா?

இதனைத்தான் தெளிவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தி உள்ளார். ரஜினியின் குரல் அல்ல, அது வேறு யாருடைய குரலாகவோ தெரிகிறது என்று.

அரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி. அவர் அன்று நேரிடையான அரசியல்வாதி அல்ல. ஆனால் இன்று யாருடைய அச்சறுத்தலுக்கோ பயந்து அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

எல்லோருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக, ‘வில்லனாக’ விமர்சிக்கப்படுகிறார். அரசியலில் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றிட உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை.

ஆன்மிக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்து போக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply