காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல : ரஜினிகாந்த்

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply