மதத் தலைவர்கள் தலைமையில் மாகாண மட்டத்தில் குழு : ஜனாதிபதி தெரிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளை கண்டறிவதற்கு மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று முன்தினம் (29) விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்த போதே, இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது,
பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே நான் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.
பௌத்த மதத் தலங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
வடக்கில் குருந்தி விகாரையின் பிரச்சினையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிப் பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாமென அப்பகுதி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளதால் வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர். அது தொடர்பில் வவுனியா மகாநாயக்க தேரரையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அதனால் நாம் வெளியிலிருந்து அந்த பிரதேசத்துக்கு செல்வதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை. அது தொடர்பிலான விடயங்களை கண்டறியுமாறு தொல்பொருளிலியல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் சட்டத்துக்கமைய செயற்படுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மகா விகாரையில் அகழ்வுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளோம். வடக்கில் இடம்பெறும் அகழ்வுகளின் அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுப்போம்.
முன்னைய அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் அகழ்வுகளை துரிதப்படுத்தியதாக கூறினீர்கள். இருப்பினும் அந்த ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. தொல்பொருள் திணைக்களம் வழங்கும் தீர்மானத்துக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். அந்தப் பகுதிகளை பாதுகாக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பௌத்த தலங்களை பாதுகாக்கும் அதேநேரம் முதலில் தொல்பொருளிலியல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் மற்றைய மதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமாயின் அதுபற்றி ஆராயவும் தயாராகவுள்ளோம். இருப்பினும் வெளியிலிருந்து வருவோர் அப்பகுதிகளுக்குள் பிரச்சினைகளை தோற்றுவிக்க நாம் இடமளியோம். அதற்காக மாகாண மதத் தலைவர்கள் குழுவொன்றை நியமித்து பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகள் ஏற்படாது.
அதேபோல் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கமைவான சட்டமூலமொன்று 20 வருடங்களின் முன்னர் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் உள்ளடக்கங்களை நாம் மாற்றியமைத்தோம். ஒவ்வொரு மாகாணங்களிலிருந்தும் ஒருவர் என்ற அடிப்படையில் 09 பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பதவிகளை வகிக்கும் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், காணி பயன்பாடு தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றை தயாரிக்க வேண்டும். காணி பயன்பாடு தொடர்பிலான இணக்கபாட்டினையும் எட்ட வேண்டும். காணி தொடர்பிலான மறுசீரமைப்புக்கள் எவையும் மேற்கொள்ளப்படாது என்பதோடு, காணிச் சட்டம் தொடர்பில் தேசிய அளவில் மாற்றங்கள் செய்யப்படும். அதனை செயற்படுத்தும் பணிகள் மாகாண சபைகளிடத்தில் ஒப்படைக்கப்படும். தேசிய காணி ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைய அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும்.” என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply