சீன பயணத்தை முடித்து நாடு திரும்பினார் டிரம்ப்

அமெரிக்கா, சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது. மேலும், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த புதன்கிழமை (மே.13) சீனா சென்றார். நேற்று முன்தினம் பீஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் என்ற அரசு கட்டிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், ஈரான் போர், சீனா, அமெரிக்கா இடையேயான வர்த்தக முரண்பாடு மற்றும் தைவான் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது “தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாக கையாண்டால் அது இருநாடுகளிடையே நேரடி மோதலை தூண்டும்” என சீன அதிபர் ஜி ஜின் பிங் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும், ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தியதாக வௌ்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன பயணத்தை முடித்து கொண்டு நேற்று நாடு திரும்பினார். பீஜிங்கில் நேற்று நடந்த பிரியாவிடை சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜி ஜின் பிங், “டிரம்பின் சீன வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இருதரப்பும் ஆக்கப்பூர்வமான உறவை கட்டிஎழுப்புவதற்கான புதிய பார்வையை வழங்கி உள்ளது” என்றார். இந்த சந்திப்பின்போது அமெரிக்காவுக்கு வருமாறு சீன அதிபர் ஜி ஜின் பிங், அவரது மனைவிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அதையேற்று செப்டம்பர் 24ம் தேதி ஜி ஜின் பிங் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply