ஓரினசேர்க்கை உறவை குற்றமற்றதாக்கும் சட்டமூலத்தை ஆதரிக்கும் தேசிய மக்கள் சக்தி: கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஹரிணி கருத்து
ஓரினசேர்க்கை உறவை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமற்றதாக்கும் வகையில் ஶ்ரீலன்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த சமர்ப்பித்துள்ள சட்டமூலத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கையிலே அவர் பால் புதுமையினர் (LGBTQ+) சமூகம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கருத்துரைத்த கலாநிதி ஹரிணி அமரசூரிய ;
”நாம் அண்மைக்காலமாக இந்த சமூகம் தொடர்பில் வாதிட்டு வருகிறோம். அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்.
ஆரம்பத்திலிருந்தே, தனிநபர்கள் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.
குறிப்பாக, இந்த ஒரே பாலின உறவுகள் எங்கள் தண்டனைச் சட்டத்தில் குற்றமாக்கப்பட்டுள்ளன.
இது நம் நாட்டில் உருவான சட்டம் அல்ல. விக்டோரியா காலத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, இந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
வயது வந்த இருவரின் உறவுகள் தொடர்பான தீர்மானங்கள் சட்டத்தால் நிர்ணயிக்கப்படாது சம்பந்தப்பட்ட நபர்களால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என எமது கட்சி நம்புகிறது.
இருப்பினும், குழந்தைகளைப் பாதுகாக்கவும், சாத்தியமான தீங்குகளைக் குறைக்கவும் ஒரு சட்டம் இருக்க வேண்டும்.
விலங்குகளுடனான பாலியல் உறவுகள் மட்டுமே குற்றமாகும். எனவே, இந்த சட்டமூலம் தொடர்பான மூன்றாவது வாசிப்பின் போது தேசிய மக்கள் சக்தி இதனை ஆதரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply