ஜனாதிபதியின் நற்செய்தி எதிர்க்கட்சிகளுக்கு கெட்டதாகும் : ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நற்செய்தியுடன் தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் வங்குராேத்து நிலையிலிருந்த நாடு மீண்டும் சாதாரண நிலைமைக்கு மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (26) நாட்டு மக்களுக்கு வழங்கிய நற்செய்தி மூலம் நாடு வங்குராேத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதுடன் கடந்த 3 வருடங்களுக்கும் அதிக காலம் தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் இந்த நற்செய்தி நாட்டை நேசிக்கின்ற மக்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இந்த நற்செய்தியை தெரிவிக்கும்போது, நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதேநேரம் ஜனாதிபதியின் நற்செய்தி எதிர்க்கட்சிகளுக்கு கெட்ட செய்தியாகும். ஏனெனில் அவர்கள் இதுவரை காலமும் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவந்த வேலைத்திட்டங்கள விமரிசித்துக்கொண்டிருந்தார்கள். பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி வந்தார்கள். ஜனாதிபதியின் நற்செய்தியுடன் எதிர்க்கட்சிகளின் அனைத்து விமர்சனங்களும் பிரசாரங்களும் பொய்யாகியுள்ளன. இதன் பின்னர் அவர்களுக்கு மக்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன. தற்போது அதனை அரசாங்கம் செய்திருக்கிறது.அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும்போது எமக்கு கடன் வழங்கப்போவதில்லை என தெரிவித்தார்கள். இவ்வாறு எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்த அனைத்து பிரசாரங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நற்செய்தி மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் நாடு வங்குராேத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதைச் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களே தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது. ஆனால் எமது நாடு வங்குராேத்து நிலையை அடைந்தபோது அது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரே நாட்டுக்கு அறிவித்தது. மாறாக சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் எதுவும் அது தொடர்பில் தெரிவிக்கவில்லை.
அதேபோன்று தற்போது நாடு தற்போது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், வங்குராேத்து நிலையில் இருந்து மீண்டுள்ளது என்ற தகவலையும் மத்திய வங்கியே தெரிவிக்கிறது. ஜனாதிபதியின் நற்செய்தியுடன் எமது நாடு சாதாரண நிலைமைக்கு மாறியுள்ளது.
எனவே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களை சர்வதேசம் அனுமதித்துள்ளது. அதனாலே கடன் மறுசீரமைப்புக்கு எமக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். அதனால் நாடு வங்குராேத்து நிலையில் இருக்கும்போது நாட்டை பொறுப்பபேற்க முன்வராத தலைவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply