பாதிக்கப்பட்டோரின் கதைகளை நாம் தொடர்ந்து பகிரவேண்டும் : ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம்
தமிழின அழிப்பு தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு, ஞாயிற்றுக்கிழமையுடன் (18) 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. அதனை முன்னிட்டு விஜய் தணிகாசலம் அவரது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (18) கனடாவிலும், உலகளாவிய ரீதியிலும் வாழும் தமிழ் மக்கள் தமிழின அழிப்பு நினைவு நாளை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ‘2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்த சூன்ய வலயங்கள் மற்றும் வைத்தியசாலைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியும், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க மறுத்தும் இலங்கை அரசு இனவழிப்பொன்றை அரங்கேற்றியது’ எனக் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எண்ணற்ற அப்பாவி உயிர்களை நினைவுகூர்ந்திருக்கும் அவர், இந்த வரலாறு மீண்டும் சம்பவிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சகலரதும் கடப்பாட்டை மீளச்சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ‘நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் அவர்களது (பாதிக்கப்பட்டவர்களது) கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும்’ என்றும் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply