வவுனியாவில் பொதுமகன் உயிரிழந்ததால் பதற்றம்
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் விபத்தொன்றில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, குறித்த பகுதியில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர்கள் சிலர், உந்துருளியில் பயணித்த குறித்த நபரைத் துரத்திவந்ததாகவும், அதன்போது, உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுக்கின்றனர்.
இதன்போது, சம்பவ இடத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதையடுத்து, அங்கு பதற்றம் நிலவியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறையின் உந்துருளிகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவம் குறித்து எமது செய்திச் சேவை காவல்துறை ஊடகப்பிரிவிடம் வினவியது.
சம்பவம் குறித்து விபரித்த காவல்துறை ஊடகப்பிரிவு, உந்துருளியில் பயணித்த நபர் குறித்த கூமாங்குளம் பகுதியில் வீதியோரம் உயிரிழந்து கிடந்ததாகவும், அதன்போது தகவலறிந்து காவல்துறையினர் அங்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், காவல்துறையினர் துரத்தி வந்தமையினால் விபத்துக்குள்ளாகி, குறித்த நபர் உயிரிழந்ததாகக் கூறி, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினரைத் தாக்கியதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 5 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply