டொனால்ட் ட்ரம்ப்பின் Mar-a-Lago home இல்லத்தில் அத்துமீறிய நபர் சுட்டுக்கொலை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) சொகுசு விடுதிக்குள், பிப்ரவரி 22 அதிகாலை ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முயன்ற நபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேனுடன் வளாகத்தின் வடக்கு நுழைவு வாயில் வழியாக அவர் நுழைய முயன்றார்.

பாதுகாப்புப் பணியில் இருந்த ரகசிய சேவை (Secret Service) ஏஜெண்டுகள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி, கையில் இருந்த ஆயுதங்களைக் கீழே போடுமாறு எச்சரித்தனர்.


அதிகாரிகளின் எச்சரிக்கையைப் புறக்கணித்து, அந்த நபர் தனது துப்பாக்கியைச் சுடும் நிலைக்கு உயர்த்தியதால், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏஜெண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் இருவரும் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தனர், இதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

கொல்லப்பட்ட நபர் வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரால் காணவில்லை என புகார் அளிக்கப்பட்ட நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வடக்கு கரோலினாவிலிருந்து புளோரிடா வரை அவர் பயணம் செய்திருப்பதும், வழியிலேயே அந்தத் துப்பாக்கியை வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவரின் வாகனம் மற்றும் துப்பாக்கிப் பெட்டி ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) மற்றும் ரகசிய சேவை அமைப்பினர் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மார்ட்டின் இந்தச் செயலை ஏன் செய்தார் என்பதற்கான நோக்கம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சமீபகாலமாக அமெரிக்க அரசியல் சூழலில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மிக முக்கிய வழக்காகக் கருதி விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply