டிரம்பின் காலவரையற்ற போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் சிறைபிடிப்பு: 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்

அமெரிக்க அதிபர் டிரம்ப் காலவரையின்றி போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், ஜலசந்தியை கடக்க முயன்ற 2 கப்பல்களை சிறைபிடித்தது. இது இரு தரப்பு பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இப்போர் நிறுத்தம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்கவில்லை. ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா தொடரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஈரான் மறுத்தது. இந்த சூழலில் போர் நிறுத்தம் முடிய சில மணி நேரங்கள் இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரை அந்நாட்டின் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். ஆனாலும் ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும்’’ என்றார்.

இந்த போர் நிறுத்தத்திற்கு எந்த ஒப்புதலையும் அளிக்காத ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாய் அராக்சி, ‘‘ஈரான் துறைமுகங்களை தடுப்பது போர் நடவடிக்கை. இது போர் நிறுத்தத்தை மீறுவதாகும். ஒரு வர்த்தக கப்பலை தாக்கி, அதன் பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடிப்பது இன்னும் பெரிய மீறல். அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கை தொடரும் வரையிலும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது. அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை எப்படி முறியடிப்பது, ஈரானின் நலன்களை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply