ஈரானின் புதிய தலைவரை இலக்கு வைக்கும் இஸ்ரேல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்ச தலைவராக அந்நாட்டு நிபுணர்கள் குழுவினால் (Assembly of Experts) மார்ச் 8-ம் தேதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்பில் ஏற்கனவே வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ள மொஜ்தபா, போர்க்கால சூழலில் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணிநேரங்களிலேயே, “புதிய தலைவர் யாராக இருந்தாலும் அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்பட்டுவிட்டது” என்று இஸ்ரேல் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதல், ஈரானின் இராணுவ மற்றும் அரசியல் மையங்களை முற்றிலுமாக சிதைத்துள்ளது. இந்த மோதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டது முதல், ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேலிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போதைய சூழலில், மொஜ்தபா கமேனியைத் தனது முக்கிய இலக்காக இஸ்ரேல் கருதுவதாகத் தெரிவித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மொஜ்தபா கமேனியின் நியமனம் ஈரானின் அதிகார வர்க்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் கடினமான கொள்கைகள் (Hardline policy) மாறாது என்பதையே இது காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் ஆட்சியமைப்பை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளோம், அதற்கேற்ப எஞ்சியுள்ள அனைத்துத் தலைவர்களையும் நாங்கள் பின்தொடர்வோம்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது மத்திய கிழக்கில் போர் நீண்டகாலத்திற்கு நீடிக்கும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களும் தொடர்கின்றன. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகள் முயன்று வரும் நிலையில், மொஜ்தபா கமேனியின் தேர்வு மற்றும் அவரை இஸ்ரேல் இலக்கு வைத்திருப்பது போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போதைய கள நிலவரங்களின்படி, போர் விரைவில் ஓய்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply