முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் 2027இல் அறிமுகம் : பிரதமர் ஹரிணி அமரசூரிய
நாட்டிலுள்ள முன் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும் அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அதிகாரசபை ஒன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுத் திட்ட நிகழ்வில், உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இவற்றை கவனத்திற் கொண்ட பிரதமர், அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்துள்ள பிரதமர்;
முன்பள்ளிக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளை ஒட்டுமொத்த சமூக மற்றும் கல்வி சார்ந்த பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது, நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்டு, சரியான பொருளாதாரக் குறிகாட்டிகளை நிவர்த்தி செய்வதே எமது பிரதான சவாலாக இருந்தது. இதற்கமைய, 2025ஆம் ஆண்டு சவாலான ஆண்டாக அமைந்த போதும், நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வரவும், வரவு செலவுத் திட்டத்தைச் சமநிலைப்படுத்தவும் எம்மால் முடிந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் வேளையிலேயே மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானது. அதன் தாக்கம் எமது நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு அதிகளவான வெளிநாட்டு வருமானம் மத்திய கிழக்கில் பணியாற்றும் எமது சகோதர சகோதரிகளி டமிருந்தே கிடைத்து வந்தது. தற்போது அவர்களின் உயிருக்கும் வேலைவாய்ப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கு வான்பரப்பு மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடைந்துள்ளது. அத்தோடு எரிபொருள் போக்குவரத்து தொடர்பான சிக்கல்களும் எழுந்துள்ளன.
போர் நீடித்தால் எமக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும். இதற்குத் தயாராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யச் செலவுகளை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எமக்குக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தபோதிலும், மேலும் கடன் வாங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க நாம் விரும்பவில்லை.
எமது கல்வி மறுசீரமைப்புக் கொள்கையிலேயே முன்பள்ளிக் கல்வியை மறுசீரமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது .இதுவரையான காலப்பகுதியில் முன்பள்ளிகளை ஆரம்பித்தல் மற்றும் ஆரம்ப சிறுவர் பருவ அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகையால், அனைத்து முன்பள்ளிகளையும் ஒழுங்குபடுத்தவும் தரப்படுத்தவும் வேண்டியுள்ளது. இது எளிதான காரியமல்ல.
எனவே, முதலில் அனைத்து முன்பள்ளிகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிக்காக ஏற்கனவே ஒரு பாடத்திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply