மூன்று மாதங்களில் 20 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு : அருண ஜயசேகர

இவ்வருடம் கடந்த 3 மாத காலப்பபகுதிக்குள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் 20 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 மீன்பிடிப் படகுகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரி்வித்தார்.

கடற்படையினரால் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் திங்கட்கிழமை (16) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஜயம் செய்திருந்த பிரதி அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எனன குறிப்பிட்டு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள பொறுப்புமிக்க வேலைத்திட்டத்துக்கமைய மேற்படி போதைப்பொருள் கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் நீண்டதூர ரோந்துப் பிரிவு, பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் அரச புலனாய்வுச் சேவைகள் என அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து, பல நாட்களாகக் கடலில் முன்னெடுத்த மிக நுணுக்கமான கண்காணிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் பிரதிபலனாகப் போதைப்பொருளுடன் குறித்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, மிரிஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகிலிருந்து 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சந்தை பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாவுக்கம் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை பேரூவலை கடற்பரப்புக்கு அப்பால், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மீன்பிடி படகையும் கடற்படையினர் சுற்றிவளைத்துக் கைப்பற்றியுள்ளனர். அதன் முழுமையான விபரங்கள் அப்படகினை கரைக்குக் கொண்டு வந்த பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 71 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இவ்வாண்டு கடந்த 3 மாத காலப்பபகுதிக்குள் மாத்திரம் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 20 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 மீன்பிடிப் படகுகளும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடத்தல்காரர்களை உடனடியாக இதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. பொதுமக்கள் 1918 அல்லது 1997 ஆகிய இலக்கங்களுக்குத் தகவல் வழங்குவதன் மூலம் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்தப் பேரழிவிலிருந்து பாதுகாக்க,எவ்விதத்திலும் போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply