மீள்குடியேற்றப்பட்ட மக்கள் திறந்தவெளியில் காலத்தை கடத்தும் நிலை: சம்பந்தன்
வன்னி நிலப்பரப்பில் மீள்குடியேற்றப்பட்டதாக கூறப்படுகின்ற மக்களுக்கு உரிய வகையிலான வாழ்விடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த மக்கள் காலநிலையின் இடர்பாடுகளுக்கு முகம் கொடுப்பதுடன் திறந்த வெளியிலேயே காலத்தை கடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் அதிருப்தி வெளியிட்டார்.
வன்னியில் கொண்டுசேர்க்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிக்கான விஜயம் சம்பந்தமான விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற வன்னிப் பகுதிக்கு கடந்த 22, 23 ஆம் திகதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விஜயம் செய்திருந்தது.மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் உலக உணவு ஆதார திட்டத்தினால் அரிசி, பருப்பு, தேங்காய் எண்ணெய் போன்ற சில உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வன்னி நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் யுத்தத்தினால் அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் அங்கு மீள்குடியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவும் போதாக் குறையாக இருக்கின்றது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லை.
இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கென 1, 2 தர தரப்பாழ், சீமெந்து பைக்கற்றுகள் 8, 4 5 தடிகள் போன்ற மூலப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க அநேகமானோர் திறந்த வெளியில் சீவனம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் காலநிலை சீற்றத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். மொத்தத்தில் அவர்கள் அங்கும் அவல வாழ்க்கையையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
எனவே வன்னியில் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ள மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மீள்குடியேறியுள்ளவர்களில் மீன்பிடித் தொழில், விலங்கு வேளாண்மை, விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் இவர்களுக்கான தேவைகள் உணரப்பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
மேலும் யுத்தத்தினால் நீர் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர் விநியோகம் சீர்படுத்தப்பட வேண்டும்.
அங்குள்ள கிணறுகள் பழுதடைந்துள்ளன. இவற்றின் புனர்நிர்மாணம் அவசியமானதாகும். அத்துடன் விவசாயத் தொழிலுக்குத் தேவையான நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் எல்லைகளை அமைத்துக் கொள்வதற்கான கம்பிகள் மற்றும் விதை பொருட்கள் ஆகியவற்றின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாது அங்கு குடியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசர நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் சைக்கிள்கள் மற்றும் உழவு இயந்திரங்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்துகிறோம்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோருக்கு படகுகள், வலைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் வழிபாட்டுத் தலங்களும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
வன்னியில் மீளக் குடியேறியுள்ள மக்கள் தனது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லக் கூடிய வகையிலான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதேவேளை சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் போரில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்களுக்கு நட்டஈடுகளும் வழங்கப்பட வேண்டும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இன்னும் மீளக் குடியேற முடியாத நிலையில் இருக்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.அதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
யுத்தம் உக்கிரமடைந்த காலப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் எந்த விதமான அக்கறையும் செலுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே இந்த யுத்தம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனை உலகே அறிந்துள்ளது.
இவ்வாறானதோர் யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அவர்கள் தமது பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும. அந்தச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கே உண்டு” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply